தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்றுப் புதன்கிழமை தலைநகர் பாங்கொக்கில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான தலைவர்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் விரக்தியடைந்த அவர், கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் தனது கையில் இருந்த கிருமிநாசினியை(சனிடைசர்) பத்திரிகையாளர்களின் முகத்துக்கு நேரே தெளித்தவாறு புறப்பட்டுச் சென்றார். பத்திரிகையாளர்களுடன் கோபமாகப் பேசியதுடன், அவர்கள் கூறுவதை காது கொடுத்துக் கேட்காமல் சென்றுவிட்டார். அவரது இந்தச் செயற்பாட்டை பார்த்து பத்திரிகையாளர்கள் திகைத்தனர்.
பிரதமர் பிரயுத் சாதாரணமாக அனைவரிடமும் பேசக்கூடியவர். சில நேரங்களில் நகைச்சுவையாகவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தவர். ஆனால் பெரும்பாலும் பத்திரிகையாளர்களைத் திட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal