ஈரானிய அகதியான Ebrahim Obeiszade கடைசியாக பணியாற்றி 8 ஆண்டுகள் கடந்து விட்டன. தெற்கு ஈரானில் உள்ள சர்க்கரை ஆலையில் பணியாற்றிய அவரின் வாழ்க்கை இன்று ஆஸ்திரேலியாவில் வேறொரு கோணத்தில் உள்ளது.
ஈரானில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஆஸ்திரேலியாவை நோக்கி கடல் பயணத்தை மேற்கொண்ட அவர், கடந்த 8 ஆண்டுகளை தடுப்பு முகாம்களிலேயே/தடுப்பிலேயே கழித்திருக்கிறார்.
இவ்வாறான அகதிகள் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசிடம் ஏற்பட்ட திடீர் எண்ண மாற்றத்தால் இவர் 6 மாத தற்காலிக விசாவில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக, கடந்த ஜூலை 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியா நோக்கிய படகுப் பயணத்தின் போது கைது செய்யப்பட்ட இவர் முதலில் கிறிஸ்துமஸ் தீவிலும் பின்பு மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலும் வைக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர், மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் கங்காரூ பாய்ண்ட் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்தார்.
‘எவ்வளவு காலம் என்னை இங்கு வைத்துள்ளப் போகிறீர்கள்’ என ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் அப்போது கேட்பேன், ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது என்கிறார் Ebrahim.
ஆஸ்திரேலியாவில் சுமார் 2 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட ஈரானிய அகதியான Ebrahim சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.
“அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியவில்லை. என்னால் ஒரு வேலையைப் பெற முடிந்தால், நானே என் தங்குமிடத்திற்கான வாடகையை செலுத்தி விடுவேன்….ஆனால் எட்டு ஆண்டுகள் தடுப்பில் இருந்த எங்களுக்கு வேலையையும் தங்குமிடத்தையும் குறுகிய காலத்தில் கண்டடைவது மிகவும் சிரமமானது,” என தனது தற்போதைய மனநிலையை ஈரானிய அகதியான Ebrahim Obeiszade பகிர்ந்திருக்கிறார்.