நேற்று நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் ஏப்.21, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பான பரிந்துரைகளை செயற்படுத்துவதில் யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க ஆயர்கள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஆய்வு செய்ததாகவும் அதன் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் கூறினர்.
குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள், அதற்கு உதவியவர்கள் மற்றும் தங்கள் கடமைகளைப் புறக்கணித்ததாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு முழு அதிகாரமும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்குத் தேவையான நீதித்துறை பொறிமுறையை விரைவில் அமைக்க வேண்டும் என்றும் கூறினர்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 22 ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதை தாம் அறிந்துள்ளதாகவும் அவற்றில் முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் அந்த ஆவணங்களை சாத்தியமானளவு விரைவில் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இச்சந்திப்பில் அவர்கள் கூறினா்.