உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான மூளைசாலி யார்?

இலங்கை வாழ் கத்தோலிக்கர்கள், நேற்றைய ஞாயிறு தினத்தை, ‘கறுப்பு ஞாயிறு’ ஆக, அனுஷ்டித்தனர். அந்த அமைதிவழிப் போராட்டத்துக்கு, ஏனைய மதத் தலைவர்களும் ஆதரவளித்தனர். இன்னும் சில மதத் தலைவர்கள், தேவாலயங்களுக்குச் சென்று, எதிர்ப்புப் போராட்டத்திலும் இணைந்துகொண்டனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின்  உண்மையான  மூளைசாலி யார் என்பதை வெளிப்படுத்துவதே எமது முயற்சியாகும் என்றார்.

‘கறுப்பு ஞாயிறு’ எதிர்ப்புப் பேராட்டம், கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் முன்பாக நடைபெற்றது. அதில், பங்கேற்ற பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தேவாலயங்களைத் தவிர, ஏனைய மாவட்டங்களிலுள்ள தேவாலயங்களுக்குச் சென்றிருந்தவர்கள் கறுப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்திருந்தனர். ஞாயிறு விசேட திருப்பலிக்குப் பின்னர். தேவாலயங்களுக்கு முன்பாக அமைதிவழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தனது கோரிக்கைக்கு செவிமடுத்து, கறுப்பு ஆடையில் இன்றைய ஆராதனைகளில் கலந்து கொண்டமைக்காக மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், விசேடமாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் குண்டை வைத்தவர்கள், அதற்காக நிதி வழங்கியவர்கள், எந்த அரசியல் சக்தி இதன் பின்னணியில் செயற்பட்டது.

அதற்கு சர்வதேச அமைப்புகள் ஒத்தழைப்பு வழங்கியனவா என்பது தொடர்பில், நேர்மையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அரசாங்கம் அதிகமாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்பதே தனது உணர்வு என்றார்.

‘அது, அரச நிறுவனங்களின் மேலதிக ஒருங்கமைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென நாம் நம்புகின்றோம். அதைச் செய்யும் வரை, அதற்கான நிரந்தர அடையாளம் ஒன்று கிடைக்கும் வரை, கத்தோலிக்க திருச்சபை ஏனைய மத அமைப்புகளை ஒன்றிணைத்து, இந்த எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்’ என்றார்.

இது கத்தோலிக்கர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையில்லை. முழு இலங்கை மக்களையும் பாதித்த பிரச்சினையாகுமெனத் தெரிவித்த அவர்,  இத்தாக்குதலின் பின்னர், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சுற்றுலாத்துறை செயலிழந்ததுடன் அதன் பின்னர் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றையடுத்து, நாடும் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், இலங்கை மக்கள் மிகவும் துன்பப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றார்.

‘எனவே, எமக்கு இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை நிறுத்துவதாகும். இவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் ஒரு தடவை நடைபெறுவது குறித்து சிந்திக்கக் கூட இடமளிக்காமால் நாட்டைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். இதனால்தான் பௌத்த தேரர்களும் எம்முடன் இணைந்துள்ளனர்’ என்றார்.

எமக்கு முஸ்லிம்களுடன் எவ்வித வைராக்கிமும் இல்லை. இதை வழிநடத்தியவர் யாரெனத் தேடுவது, முஸ்லிம்கள் மீதான கோபத்தால் அல்ல. தவறு யார் செய்தாலும் தவறே. இதனை வழிநடத்தியவர் யார்? என்பதைத் தேடுவதைப் பிற்போட முடியாது. அவர் யாரென விரைவில் தேடுவது அவசியமாகுமெனத் தெரிவித்த அவர், அதனை வெகுவிரைவாகச் செய்ய வேண்டும்;

இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் வியூகத்தை, எமக்குக் காண்பிக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கத்திடம் இதைத்தான் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இந்த அறிக்கையை ஆராய மற்றுமொரு குழுவை நியமித்தது அவசியமா? தாம்செய்ய வேண்டியதை விரைவில் செய்ய வேண்டும். அதனை இன்னொரு குழுவுக்கு ஒப்படைப்பது தாமதத்துக்கு வழிவகுக்கும் என்றார்.  இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பல விடயங்களைச் செயற்படுத்த முடியும். அதற்காக இன்னொரு குழுவை நியமித்தது தேவையற்ற ஒன்றாகும் என்றார்.

‘கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, குற்றவாளி யாரென்று வெளிப்படுத்துவதுடன் அவர்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுப்பதை ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்க்கின்றோம்’ என்றார்.