அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களின“ நிலை என்ன?

கடந்த மார்ச் 1ம் திகதி, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஆஸ்திரேலியாவின் கங்காரூ பாய்ண்ட் ஹோட்டலிலிருந்தும் பிரிஸ்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்தும் 25 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த ஜனவரி 20ம் திகதி முதல் இதுவரை 115 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்றதாக சுமார் 8 ஆண்டுகளாக கடல் கடந்த தடுப்பிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அகதிகள் பல ஆண்டுகள் கழித்து விடுவித்துள்ளமை குறித்த அகதிகளும் அகதிகள் நல செயல்பாட்டாளர்களும் மகிழ்ச்சித் தெரிவித்துள்ள போதிலும் அகதிகள் எதிர்கொள்ளப்போகும் அடுத்தக்கட்ட அச்சம் எழுந்துள்ளது.

“முன்பு தடுப்பிற்கான மாற்று இடத்திலிருந்தும் மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமிலிருந்தும் விடுவிக்கப்பட்ட அகதிகளுக்கு ஆறு வாரங்கள் வரை தங்குவதற்கான உதவிகளும் பிற உதவிகளும் வழங்கப்படுகின்றது. ஆனால் தற்போது விடுவிக்கப்பட்ட அகதிகளுக்கு என்ன உதவிகள் வழங்கப்படும் என்பதில் நிச்சயத்தன்மையற்ற நிலையே தொடர்கின்றது,” என தஞ்சக்கோரிக்கையாளர்கள் வள மையம் தெரிவித்திருக்கிறது.

“அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இணைப்பு விசா என்பது Job Keeper, Job Seeker போன்ற அரசின் உதவிகளுக்கு உள்ளடங்காது,” என அம்மையம் தெரிவிதிருக்கிறது. இதனால் தற்காலிக விசாவில் விடுவிக்கப்பட்ட அகதிகள் தங்குமிட வசதிகள் மற்றும் தங்களது தேவைகளை பொருளாதார ரீதியாக சமாளிப்பதில் பிரச்னையை எதிர்கொள்வார்கள் என அஞ்சப்படுகின்றது.

அத்துடன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 6 மாத விசா என்பது தற்காலிக இறுதிப் புறப்பாடு விசா மட்டுமே ஆகும். இதன் மூலம் இந்த அகதிகளுக்கு ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைகளை இந்த அகதிகளால் பெற முடியாது. இவ்விசாவின் அடிப்படையில் அவர்கள் எதிர்காலம் குறித்து ஆராய்ந்தால், வேறொரு நாட்டில் நிரந்தரமாக மீள்குடியேறுவது அல்லது சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்புவது என்ற வாய்ப்புகள் மட்டுமே அவர்கள் முன் உள்ளது.