நியூஸிலாந்தில் 8.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின் கிழக்கு பகுதியில், ஒக்லாந்து நகரில் இருந்து சுமார் 256 மைல்கள் தொலைவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியைச் சுற்றி 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது மற்றும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் வடக்கு தீவின் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிழக்கு கடற்கரையில் சுனாமி அச்சுறுத்தல் இருப்பதாக தேசிய அவசர நிறுவனம் எச்சரித்தது. சில நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயர்ந்த நிலத்தை அடைய முயன்றதால் குழப்பம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.