எங்களை போராட்டக் களத்திலிருந்து அகற்றுவதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முற்றிலுமாக ஈடுபட்டு வருகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் தமது குடும்பம் வரை இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த பதினொரு வருடங்களாக எமது உறவுகளைத் தேடி அலைகின்றோம். இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு நீதியும் கிடைக்காது என்ற பட்சத்திலேதான் சர்வதேச பொறிமுறையை நாடி நாங்கள் நிற்கின்றோம்.
தற்போதைய அரசாங்கம், ஏற்படுத்தப்பட்ட சர்வதேசப் பொறிமுறையைக் கூட நிராகரித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களிலிருந்து விலகியுள்ளது. அந்தவகையிலே நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடி நிற்கின்றோம் என்றார்.