ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, நியூயோர்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்’ நிறுவனம், அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.
‘தமது மோசமான மனித உரிமைகள் வரலாற்றைப் பற்றியும் பரவலாக இடம்பெறும் தண்டனையற்ற குற்றங்களைப் பற்றியுமான சர்வதேச விமர்சனங்களைத் திசை திருப்புவதற்காக, எவ்வித ஒழுங்குமற்ற ஆணைக்குழுக்களை நியமிக்கும் வரலாறொன்று இலங்கைக்கு இருக்கிறது. 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல், குறைந்த பட்சம் அவ்வாறான 10 ஆணைக்குழுக்களையாவது இலங்கை நியமித்துள்ளது. அவற்றில் ஒன்றாவது குறிப்பிடத்தக்க பயனைத் தரவில்லை’.
சர்வதேச மன்னிப்புச் சபையும் இந்த விடயத்தைப் பற்றி, 2009ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருந்தது. ‘Twenty Years of Make-Believe – Sri Lanka’s Commissions of Inquiry’ என்ற பெயரிலான அந்தப் புத்தகத்திலும் இலங்கையின் அரசாங்கங்கள் மனித உரிமைகள் விடயத்தில் நடந்து கொள்ளும் முறை விமர்சிக்கப்பட்டு இருந்தது. இலங்கை அரசாங்கங்கள் ஆணைக்குழுக்களை நியமிப்பதன் நோக்கம், புத்தகத்தின் பெயரிலேயே கோடிட்டுக் காட்டப்படுகிறது.
இலங்கையில் Law and Society Trust என்ற அமைப்பு, 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இதே விடயத்தைப் பற்றி, ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருந்தது. ‘A Legacy to Remember – Sri Lanka’s Commissions of Inquiry – 1963- 2002’ என்ற பெயரிலான அந்தப் புத்தகத்தில், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொலை தொடர்பான ஆணைக்குழு முதல், 2002ஆம் ஆண்டு வரை, பல்வேறு அரசாங்கங்கள் நியமித்த ஆணைக்குழுக்கள், எவ்வாறு வெறும் கண்துடைப்புகளாக மாறின என்பது எடுத்துக் காட்டப்பட்டு இருந்தது. இலங்கையில் ஆணைக்குழுக்கள், நேர்மையான நடவடிக்கைகள் அல்ல என்பதையும் வெறும் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதையும், இந்நூல் தெளிவாக உணர்த்துகிறது.
ஆயினும், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அதாவது அவ்வாண்டின் உயர்த்த ஞாயிறு தினம், மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் மீதும், மூன்று தேவாலயங்கள் மீதும், முஸ்லிம் பயங்கரவாதக் குழுவொன்று நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழு, முன்னைய ஆணைக்குழுக்களை விட ஓரளவுக்கு வேறுபட்டதாகும். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், அந்தத் தாக்குதல் விடயத்தில் தாம் பொறுப்புதாரர் அல்ல என்று நிரூபிக்கும் நோக்கம், மைத்திரியிடம் இருந்திருக்கலாம். ஆனால், தாக்குதலின் பின்னணி என்ன என்பதை, ஆணைக்குழு மூலம் அறியும் உண்மையான நோக்கமும் அவரிடம் இருந்திருக்கலாம்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான இந்த ஆணைக்குழு, தம்மை நியமித்தவருக்கு எதிராகவே குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்த, உலகில் ஒரே ஆணைக்குழு என்ற வகையில், வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், தமது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் போது, மைத்திரியே ஜனாதிபதியாக இருந்திருப்பாரேயானால், ஆணைக்குழு அவ்வாறானதொரு பரிந்துரையைச் செய்யுமா என்பதும் சந்தேகமே.
இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத்தும், அப்போதைய ஜனாதிபதியை ஆத்திரமூட்டாத வகையிலேயே தமது அறிக்கைகளைத் தயாரித்துள்ளன. அதேவேளை, பல ஆணைக்குழுக்கள் அப்போதைய ஜனாதிபதிக்குத் தேவையான முறையில், அவரைத் திருப்திப்படுத்தும் வகையில், தமது அறிக்கையைத் தயாரித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவும், ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்ற அடிப்படையில், நாட்டில் சட்டம் அமைய வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்பது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சுலோகமாகும். எனவே அது, தற்போதைய அரசாங்கத்தை திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையாகும்.
ஆணைக்குழு, நாட்டிலுள்ள அனைவரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால், தாக்குதலை நடத்திய ஸஹ்ரான் ஹாஷிமுக்கும் தலைமை தாங்கிய ஒருவர் இருந்திருக்கலாம் என்றும் அவர்களுக்கு பணம் முதலானவற்றை வழங்கியவர்கள் இருக்க வேண்டும் என்றும் பலர் நம்பினர்.ஆனால் ஆணைக்குழு, ‘ஸஹ்ரானே தாக்குதல் நடத்திய குழுவின் தலைவர் என்றும் தெமட்டகொட வர்த்தகரான முஹம்மத் இப்ராஹீமின் இரு மகன்களான இன்சாப், இல்ஹாம் ஆகியோரே அக்குழுவுக்குத் தேவையான நிதி வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளது. இன்சாப், இல்ஹாம் ஆகிய இருவரும் தாக்குதல்களின் போது உயிரிழந்தனர்.
ஓர் இயக்கத்தின் தலைவர், ஆரம்பத்திலேயே தற்கொலை செய்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே பலர், ஸஹ்ரானுக்கு மேலாக மற்றொரு தலைவர் இருந்திருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
ஆனால், இந்தப் பயங்கரவாத குழுவுக்கு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றோ, தனி நாட்டை அடைய வேண்டும் என்றோ, எவ்வித நோக்கமும் இருந்ததாக ஆதாரம் இல்லை. அவர்கள், பிற சமயத்தவரைக் கொலை செய்து, சுவர்க்கம் செல்லலாம் என்ற இஸ்லாத்துக்கு முரணான, மிருகத்தனமான, மூட நம்பிக்கையில் செயற்பட்டதாகவே தெரிகிறது. எனவே, இது போன்ற ஒரு குழுவின் தலைவரே, ஆரம்பத்தில் தற்கொலை தாக்குதல் நடத்த முன் வரலாம்.
ஆயினும், அவர்கள் தற்கொலைக் குண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, எவ்வாறு பெற்றனர் என்பது ஆராயப்பட வேண்டிய விடயமே.
தாக்குதலுக்குப் பின்னால் இயங்கியவர்களை அம்பலப்படுத்தி, அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என, கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கடந்த இரண்டு வருடங்களாக, அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்.அவர், அக்கருத்தை வெளியிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களைப் பற்றி, அவர் ஏதோ அறிந்து வைத்திருக்கிறார் அல்லது, குறிப்பிட்ட சிலரைச் சந்தேகிக்கிறார் போல் தெரிந்தது. ஆனால், ஆணைக்குழு அவ்வாறு எவரையும் குறிப்பிடவில்லை. எனவே, இப்போது கத்தோலிக்க மக்கள் விரக்தியடைந்துள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையை ‘கறுப்பு ஞாயிறு’ எனப் பிரகடனப்படுத்தி இருக்கின்றனர்.
ஸஹ்ரானின் மனநோயாளர்களான பயங்கரவாதக் குழுவைத் தவிர்ந்த, ஏனைய இலங்கை முஸ்லிம்கள் மீதான சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும், அவர்களை ஆணைக்குழு விடுவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இதில் சிக்கலாம் எனப் பலர் நினைத்தனர். கர்தினாலும் அவ்வாறு சிந்திப்பதாகக் கடந்த காலத்தில் தெரிந்தது. ஆனால், சந்தேகநபர் ஒருவரைப் பற்றி, அப்போதைய இராணுவத் தளபத் மஹேஷ் சேனாநாயக்கவிடம் தொலைபேசியில் வினவியதைத் தவிர, அவருக்கு எதிராக ஆணைக்குழு எவ்வித குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.
கடந்த வருடம், ஐந்து மாதங்களாக இரகசிய பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்ட ரிஷாட்டின் சகோதரர் ரியாத்தைப் பற்றியும், மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று மட்டுமே ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதற்காக ஆணைக்குழு மேலதிக ஆதாரங்களை வழங்கவில்லை.
ரிஷாட்டும் முன்னாள் மாகாண ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோரும் பயங்கரவாதத்துக்கு உதவி புரிவதாகக் கூறி, அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரி, அத்துரலியே ரத்தன தேரர் 2019ஆம் ஆண்டு மே மாதம், தலதா மாளிகை வளவில் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அவர்களுக்கு எதிராகவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் பெரிதாக எதுவும் இல்லை.
உண்மையிலேயே, இந்த மூன்று அரசியல்வாதிகளையும் விமல் வீரவன்ச, ரத்தன தேரர் போன்ற பேரினவாதிகளும் ஊடகங்களுமே பயங்கரவாதிகள் ஆக்கின. அந்தப் பிரசாரத்தை மக்கள் நம்பினர். இப்போது, ஆணைக்குழுவுக்கு ஆதாரமில்லாமையால் அவர்களைத் தாக்குதலோடு தொடர்புபடுத்தாது விட்டுவிட்டுள்ளது.
ஆயினும், மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக ரிஷாட், முன்னாள் இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்தமை தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. அந்த விடயம் ஆணைக்குழுவின் பொறுப்புகளில் சேர்ந்த விடயமல்ல.
இப்போது ஜனாதிபதி, இந்த ஆணைக்குழு அறிக்கையைப் பரிசீலித்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக சமல் ராஜபக்ஷவின் தலைமையில், ஆறு பேர் கொண்ட அமைச்சரவைக் குழுவொன்றை நியமித்துள்ளார். அந்தக் குழுவில், இத்தகைய பாரிய பொறுப்பொன்றை நிறைவேற்றக் கூடிய நிபுணத்துவ அறிவுள்ளவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இறுதியில் மக்களின் பணத்தில், கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட ஆணைக்குழு, என்ன செய்தது என்ற கேள்வி மட்டுமே மீதமாகியுள்ளது?
-எம்.எஸ்.எம். ஐயூப்