இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவு ஒறுப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தால் இன்று(புதன்கிழமை) காலை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் உட்பட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை லண்டனில் 27ஆம் திகதி ஆரம்பித்தார்.
அவருக்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த 28 ஆம் திகதி முதல் நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடன், அரச தலைவர்கள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பலர் இணைந்துகொண்ட நிலையில், இன்று 4ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.