அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து கொண்டிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலியாவின் படகுக் கொள்கையினால் பல ஆண்டுகள் மனுஸ்தீவிலும் நவுருத்தீவிலும் உள்ள தடுப்பில் இருக்க வேண்டி வந்தது. நவுருத்தீவில் இருந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட இதயப்பிரச்னை இறுதியில் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்ட போதிலும் அவரது உயிரைப் பறித்து விட்டது. ஆம், அவர் தனது 39வது பிறந்தநாளுக்கு அடுத்த நாளே இதயப்பிரச்னையில் உயிரிழந்து விட்டார்.
இது ஆஸ்திரேலிய அகதிகள் கொள்கையினால் நிகழ்ந்த உயிரிழப்பு என அகதிகள் நல வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
தஞ்சக்கோரிக்கையாளர்கள் வள மையத்தின் தகவல்படி, 2014ம் ஆண்டு பிற்பகுதியில் முகமதுக்கு அடிக்கடி இதய வலி ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 2019ல் நவுருத்தீவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பின்பு அவர் மருத்துவ வெளியேற்றச் சட்டம் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
“சோமாலியாவில் அவர் (முகமது) தனது தந்தையும் சகோதரனும் கொல்லப்படுவதைக் கண்டிருக்கிறார். அவரே காயம்பட்டவராக தான் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்,” எனக் கூறுகிறார் அவரது ஆஸ்திரேலிய நண்பரான ஜூலிய ஹால்.
அரசின் கொள்கைகள் எனது நண்பரின் கனவுக் கண்டிருந்த எதிர்காலத்தை அவர் ஆஸ்திரேலியாவில் உருவாக்க நினைத்த வாழ்க்கையை அழித்து விட்டது என்கிறார் ஜூலிய ஹால்.
மனுஸ் மற்றும் நவுருத்தீவில் வைக்கப்பட்டிருந்த பொழுது முகமதுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைத்திருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருப்பார் என அவரது நண்பர்கள் கவலைக் கொள்கின்றனர்.
கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நிரந்தரமாக குடியமர்த்த மாட்டோம் எனக் கூறிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.