அவுஸ்ரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளருக்கு நீதி கிடைத்தது!

அவுஸ்ரேலியாவின் தொழிலாளர் நலன்சார் அமைப்பான Fair Work, இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருக்கு, குறைந்த ஊதியத்தை வழங்கிய நிறுவனம் ஒன்றிடமிருந்து, சுமார் 8,711 டொலர்களை பெற்றுக் கொடுத்துள்ளது.

மெல்பேர்ணிலுள்ள Shelly Removals and Storage  என்ற நிறுவனத்தில் கடந்த வருடம் அக்டோபர் முதல் இவ்வருடம் ஜனவரி வரை இலங்கையிலிருந்து வந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பணிபுரிந்துள்ளார்.

இவர் வாகனத்தில் சென்று தளபாடங்களை ஏற்றி இறக்கும் பணியில் வாரமொன்றுக்கு 50 மணிநேரங்கள் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இவருக்கு மணிக்கு 18 டொலர் என்ற கணக்கின்படி 30-38 மணித்தியாலங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் Fair Work Ombudsmanஇன் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த நிறுவனம் ஆஸ்திரேலியச் சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து குறித்த தொழிலாளருக்கு வழங்கியிருக்க வேண்டிய 8,711 டொலர்களைக் கொடுப்பதற்கு அந்த நிறுவனம் இணங்கியுள்ளது.

இப்படியாக பணியிடங்களில் நீங்கள் சுரண்டப்படுவதாக உணர்ந்தாலோ அல்லது வேறேதும் சிக்கல்களை எதிர்கொண்டாலோ 13 13 94 என்ற இலக்கத்தில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு Fair Work  அறிவுறுத்தியுள்ளது. மொழிபெயர்ப்பு வசதி தேவைப்படுபவர்கள் 13 14 50 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.