13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தல்

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் இந்தியா இதனை தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை கருத்தில் எடுத்துள்ளதாக ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மனிபான்டே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏழு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இந்த தீர்மானங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஆர்வமாக பங்கெடுத்துள்ளது இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் நண்பராகவும் நெருங்கிய அயல்நாடாகவும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடு இரண்டு விடயங்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அவர் ஒன்று இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டை ஆதரிப்பது மற்றையது தமிழ் மக்களின் நீதி சமத்துவம் கௌரவம் சமாதானம் ஆகியவற்றிற்கான அபிலாசைகளின் மீதான நிலையான அர்ப்பணிப்பு என குறிப்பிட்டுள்ளார்.

அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என நாங்கள் கருதுகின்றோம் என குறிப்பிட்டுள்ள இந்திய பிரதி இதன் காரணமாக தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்று இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு நல்லிணக்கம் மற்றும் 13வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் 12 வருடங்கள் முடிந்த பின்னர் காணப்படும் நிலை குறித்த மனித உரிமை ஆணையாளரின் மதிப்பீடுகள் மிகவும் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.