ஒரு பலமான கூட்டணிக்கான காலம்

அண்மையில் பிரதான தமிழ் கட்சிகள் இணைந்து கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாயிருந்தன கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் அணைத்தும் இதில் பங்குகொண்டிருக்கின்றன. மாகாண சபை தேர்தல் இடம்பெறும்பட்சத்தில் மாவை சேனாதிராசாவை வடக்கு மாகாண முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதில் கட்சிகளுக்கடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதே வேளை ராஜதந்திர சமூகத்தை அணுகுவதற்கான குழுவொன்றையும் நிமியத்திருக்கின்றனர். ஆனால் இநதக் கலந்துரையாடல்களில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் பேச்சாளராக தொடர்ந்தும் அறியப்படும் மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் பங்குகொள்ளவில்லை. சுமந்திரன் தரப்பு என அடையாளப்படுத்தக் கூடியளவிற்கு தமிழரசு கட்சிக்குள் ஒரு அணியும் உருவாகிவருகின்றது. அந்த அணி மாவை சேனாதிராசா தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதில் தெளிவில்லை.

ஒரு வேளை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மாவைய ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுக்கவும் கூடும். ஆனால் ஒப்பீட்டடிப்படையில் மாவையின் கை தமிழரசு கட்சிக்குள் பலமாகவே இருக்கின்றது. பலர் மாவையை ஆதரிக்கின்றனர். ஏற்கனவே இது தொடர்பில் கட்சிக்குள் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் கடந்த கால அனுபவங்களோடு ஒப்பிட்டால், மாவை சேனாதிசராசா தனது முடிவில் உறுதியாக இருப்பாரா என்பதிலும் சந்தேகங்கள் இருக்கின்றன. ஏனெனில் கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, மாவை சோனதிராசாவை முதலமைச்சர் வேட்டபாளராக நிறுத்த வேண்டுமென்றே பங்காளிக் கட்சிகள் விரும்பியிருந்தன. உண்மையில் ஆரம்பத்தில் விக்கினேஸ்வரனை பலரும் விரும்பியிருக்கவில்லை. சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமே விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக இருந்தனர். விக்கினேஸ்வரனுக்காக சம்பந்தன் மிகவும் பிடிவாதமாக மவையை எதிர்த்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் கூட, தமிழசு கட்சியின் பெரும்பாண்மையினரும் மாவட்ட கிளைகளும் மாவைக்கு ஆதரவாகவே இருந்திருந்தனர். ஆனாலும் அனைத்தையும் மீறியே விக்கினேஸ்வரன் நியமிக்கப்பட்டார். இதற்கு மாவையின் உறுதியற்ற தன்மையே காரணம். மாவை அன்று சம்பந்தனை எதிர்த்து நின்றிருந்தால் விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேசம் கருவிலேயே கலைந்திருக்கும்.

இன்று மாவை மேற்கொள்ளும் முடிவும் உறுதியானதுதானா – கடைசி நேரத்தில் மாவை சறுக்கிவிடுமோ – என்னும் சந்தேகத்துடன்தான் மாவைக்கு ஆதரவான நிலைப்பாட்டை மற்றவர்கள் எடுத்திருக்கின்றனர். ஆனால் மாவை வடக்கு மாகாண முதலமைச்சராக வருவதை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் , கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் விரும்புகின்றனர். இந்த தேர்தல் களோபரங்களுக்கு அப்பால், தமிழர் அரசியலை பொறுத்தவரையில், ஒரு கூட்டணிச் செயற்பாடு கட்டாயமானதாகும். ஏனெனில் தற்போதிருக்கும் அரசாங்கம் கருத்தியல் ரீதியிலும், கட்டமைப்பு ரீதியிலும் மிகவும் பலமான நிலையிலிருக்கின்றது. தென்னிலங்கையின் இதுவரைகால அரசியல் அணுகுமுறைக்கும் தற்போதைய அணுகுமுறைக்கும் இடையில் ஒரு பாரிய வித்தியாசமுண்டு.

இதுவரைகாலமும் அரசியல்வாதிகளே அனைத்தையும் தீர்மானித்தனர். அவர்கள் தங்களுக்கான ஆலோசகர்களை கொண்டிருந்தனர் ஆனால் தற்போதிருக்கும் ஜனாதிபதி தனக்கான பிரத்தியேக அணியொன்றை கொண்டிருக்கின்றார். அதுவே வியத்மக எனப்படுகின்றது. தமிழ் சூழலிலுள்ள சிலர் இதனை ஒரு சிந்தனைக் கூடமென்று தவறுதலாக எழுதிவருகின்றனர். உண்மையில் விஜத்மக என்பது ஒரு சிந்தனைக் கூடமல்ல. அது ஒரு இயக்கம். அது அரசியல்வாதிகளை உள்ளடக்கியிருக்கவில்லை ஆனாலும் அரசியல்வாதிகளுக்கான செயற்பாடுகளை தீர்மானிக்கின்றது. அது அனைத்து இடங்களிலும் விரவியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழ் கட்சிகள் தங்களுக்குள் குடும்பி சண்டைகளில் ஈடுபடுவார்களானால், தமிழர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும் பாரிய சவால்களை எதிர்கொள்ள முடியாது. இப்போதிருக்கும் நிலைமையில் ஒரு விடயத்தில் வெற்றிபெறுவது என்பதல்ல விடயம், மாறாக, முதலில் அதனை எதிர்கொள்ளுவதற்கான திராணியை வளர்த்துக் கொள்வதுதான் முக்கியமானது. ஏனெனில் தமிழர்களுக்கான வெற்றியென்பது கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியவில்லை. அது வெறும் ஊகங்களாகவும் பெரும்பாலும் கற்பனைகளாகவுமே இருக்கின்றது. இந்த நிலையில் இல்லாதவற்றை நோக்கி சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு மாறாக முதலில் இருப்பவற்றை பாதுகாப்பது எப்படியென்று சிந்திக்க வேண்டும். அதற்காக அணிசேர்ந்து செயற்பட வேண்டும். இந்த அடிப்படையில்தான் ஒரு தமிழ் கூட்டணி காலத்தின் கட்டாயமாகின்றது. கடந்தகால முரண்பாடுகள், கடந்த கால தன்முனைப்பு வாதங்கள், கடந்த கால சந்தேகங்கள் எவற்றையும் தூக்கிபிடிப்பதற்கான காலம் இதுவல்ல. தமிழ் மக்களின் நன்மை கருதி செயற்படுவதாக கூறிக்கொள்ளும் ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் இதனை புறம்தள்ளவே முடியாது. இது ஒரு வரலாற்று பணி. இதனை புறக்கணித்து இப்போதும் கட்சித் தூய்மைவாதங்களில் எவரேனும் நேரத்தை செலவிடுவார்களாயின் உண்மையில் அவர்கள் மறைமுகமாக கோட்டபாய அரசாங்கத்தையே பலப்படுத்த விரும்புகின்றனர். அவர்களது செயற்பாட்டுக்கு வேறு எந்தவகையிலும் விளக்கமளிக்க முடியாது.

பொதுஜன பெரமுன அரசாங்கம் புதிய அரசியல் யாப்பொன்று தொடர்பில் விவாதித்து வருகின்றது. இதற்கு மத்தியில்தான், தென்னிலங்கையின் கடும்போக்குவாதிகள் 13வது திருத்தச்சட்டத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டுமென்று கூறிவருகின்றனர். உண்மையில் புதிய அரசியல் யாப்பொன்று வருமாயின், பின்னர் 13வது திருத்தம் தொடர்பில் விவாதிக்க ஒன்றுமிருக்காது ஆனால், புதிய அரசியல் யாப்பின் மூலம் ஏற்கனவே மாகாண சபையிடம் இருக்கின்ற அதிகாரங்களைக் கூட பிடுங்குவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் பிரகாசமாகவே தெரிகின்றது. ஏற்கனவே மாகாண சபையின் கீழ் இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. மாகாண சபை இருக்கும் ஆனால் மிகவும் பலவீனமான நிலையிலிருக்கும். இந்த நிலைமையை எவ்வாறு தடுப்பது – இதற்கு எவ்வாறான வியூகங்களை அமைத்துச் செயற்படுதென்று கட்சிகள் சிந்திக்க வேண்டும். இருப்பதை பாதுகாக்காமல் இல்லாதவற்றை பேசிப் பயனில்லை.

இவ்வாறான சவால்களை சமாளிக்க வேண்டுமாயின், தமிழ் கட்சிகள் தங்களை ஒரு பலமான கூட்டணியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அந்தக் கூட்டணி தேர்தலுக்கானதல்ல. அரசியல் செயற்பாட்டுக்கானது. கருத்தியல் ரீதியான பலத்துடனும். ஒரு பலமான கட்டமைப்புடனும் இயங்கிவரும் இன்றைய அரசாங்கத்தின் வேகத்தை ஓரளவாவது தடுத்து நிறுத்த வேண்டுமாயின், அதனை ஒரு கூட்டணிச் செயற்பாட்டின் ஊடாகத்தான் சாத்தியப்படுத்தலாம். அரசியல் யாப்புக்கான இயக்கமொன்று தொடர்பில் தமிழ் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் சிந்திக்கலாம். ஆனால் அது ஒரு கோரிக்கை இயக்கமாக இருக்க வேண்டும். அதற்குள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் விவாதிக்கக் கூடாது. தமிழ்ச் சூழலில் மேற்கொள்ளப்படும் சில விடயங்கள் பிசுபிசுத்துப் போவதற்கு இதுவும் ஒரு காரணம். அனைத்துக்குள்ளும் தேவையற்ற விடயங்களை பேச முற்படுவது. அரசியல் யாப்பு என்றால் அங்கு அரசியல் யாப்பு தொடர்பில் மட்டும்தான் பேச வேண்டும்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசப்படும் சூழலில் இவ்வாறானதொரு விழிப்புணர்வு இயக்கம் தொடர்பில் தமிழ்கட்சிகள் சிந்திக்க வேண்டும். இதனை ஒரு கூட்டணி செயற்பாடாக முன்னெடுக்கலாம். கிடைக்கும் தகவல்களின்படி வரவிருக்கும் புதிய பிரேரணையில் அரசியல் தீர்வு விடயங்கள் உள்ளடக்கப்படுவதற்கான வாய்புக்கள் மிகவும் குறைவாகவே தெரிகின்றது. தற்போது கலந்துரையாடலுக்காக வெளியில் விடப்பட்டிருக்கும் ஆரம்பநிலை அறிக்கையில், 30/1 தீர்மானத்திலிருந்த 13வது திருத்தச்சட்டம் தொடர்பான வலியுறுத்தல் கூட கைவிடப்பட்டிருக்கின்றது. இதனை சிலர், இணைத் தலைமை நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அதே வேளை பலராலும் புகழப்படும் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது, அறிக்கையிலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எதுவுமில்லை. மூன்று கட்சிகள் சேர்ந்து கடிதங்களை அனுப்பப் போவதாக கூறியிருந்தனர். ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. நிலைமைகள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில் வேகமாகவும் தூர நோக்குடனும் விவேகமாகும் பணியாற்ற வேண்டியிருக்கின்றது. இதற்கு மேலும் கட்சிகள் தாமதித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

யதீந்திரா