ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய அறிக்கையொன்றையடுத்து அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகின்றது. அதற்கான அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கத்தின் நட்பு சக்திகளாகிய நாடுகளின் உதவி ஒத்துழைப்பையும் ஏற்கனவே அது நம்பிக்கையுடன் நாடியிருக்கின்றது. இலங்கை விவகாரத்தில் ஜெனிவாவின் அணுகுமுறை இறைமையுள்ள ஒரு நாட்டின் மீதான அத்துமீறிய செயல் என்றும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கப்போவதாகவும் சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ஜெனிவாவில் எழுகின்ற நெருக்குதல்களை முறியடிப்போம் என்று அரச தரப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் முன்பே சூளுரைத்திருக்கின்றனர்.
இருப்பினும் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ‘கோர் குறுப்’ நாடுகளின் அணிக்கு எதிராக பலமுள்ளதோர் எதிரணியை உருவாக்குவதில் அரசு எந்த அளவுக்கு வெற்றி பெறப் போகின்றது என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அதேபோன்று மனித உரிமைப் பேரவையில் எதிர்பார்க்கப்படுகின்ற புதிய பிரேரணையை எவ்வாறு இலங்கை ஏற்றுக்கொள்ளப் போகின்றது அல்லது மறுத்து நிராகரிக்கப் போகின்றது என்பதும் தெரியவில்லை.
சர்வதேச வல்லாண்மைப் போட்டி, அரசியல், பொருளாதார, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் நிலைமைகளிலேயே ஜெனிவாவில் இலங்கைக்கான ஆதரவும், எதிரணி உருவாக்கமும் அமைந்திருக்கின்றன. இந்த நிலைமகளில் ஏற்படுகின்ற மாற்றங்களே அதனை தீர்மானிக்க வல்லவை. எனவே இந்த மாற்றங்கள் எந்தவேளையிலும் இடம்பெறலாம். அல்லது இடம்பெறாமலும் போகலாம். அது அந்தந்தத் தருணத்தின் பிராந்திய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு நிலைமைகளிலேயே தங்கியிருக்கின்றது.
மறுபக்கத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர், முக்கியமாக தமிழ்த்தரப்பு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது அல்லது எவ்வாறு அதனைக் கையாளப் போகின்றது? – இந்தக் கேள்வி மில்லியன் டொலர் பெறுமதியுடையதாக இப்போது எழுந்து நிற்கின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி தமிழ்த் தேசிய மக்களுடையதாக மட்டுமன்றி முஸ்லிம் மக்களையும் உள்ளடக்கிய சிறுபான்மை இன மக்களின் ஒன்றிணைந்த எழுச்சியாகப் பரிணமித்திருக்கின்றது. இது இனப்பிரச்சினை தொடர்பிலும், இலங்கையின் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கான நீதிகோருவதிலும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் மிக்க அம்சமாகி இருக்கின்றது. ஜெனிவா விவகாரத்தைத் தமிழ்த்தரப்பினர் எதிர்கொள்வதற்கும், அதனைக் கையாள்வதற்கும் இது ஓர் உந்து சக்தியாகவும் அமைந்திருக்கின்றது.
ஆனால் இந்த உந்து சக்தி மட்டுமே ஜெனிவாவில் இலங்கை அரசைக் கையாள்வதற்கு தமிழ்த்தரப்புக்குப் போதும் என்று திருப்தி அடைய முடியாது. ஏனெனில் இலங்கை அரசு பொறுப்பு கூறும் விடயத்தில் ஏற்கனவே மனித உரிமைப் பேரவையின் 30-1 தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகியிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயல்கள் என்பன இடம்பெறவில்லை என்று பிடிவாதமாக வாதாடி வருகின்றது. இறுதி யுத்தத்தின்போது இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை. அங்கு இடம்பெற்ற அத்துமீறல்கள் போர்க்குற்றங்கள் என்பவற்றிற்கு விடுதலைப்புலிகளே காரணம் என குற்றம் சாட்டியிருக்கின்றது. இந்தப் பிடிவாதப் போக்கும், குற்றச்சாட்டுக்களும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட அமைச்சர்களினால் நாடாளுமன்றத்திலும் பொது அரசியல் வெளியிலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
சிங்கள பௌத்த மக்களை உசுப்பேற்றுகின்ற வகையிலான இந்தக் கருத்துக்கள் வெறுமனே அரசியல் பிரசாரம் மட்டுமல்ல. இராணுவமயமான ஆட்சிப் போக்கில் நாட்டைக் கொண்டு நடத்தி வருகின்ற ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் கருத்துக்களாகவே அவைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஜெனிவாவில் எந்தவிதத்திலும் எதற்கும் இலங்கை பொறுப்பு கூற வேண்டிய அவசியமில்லை என்பதில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச கர்ண கடூர நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்.
அதற்கும் அப்பால் சீன ஆதரவுப் போக்கை இறுக்கமாகப் பற்றிப்பிடித்து, முக்கியமாக சீனா, ரசியா போன்ற நாடுகளையும் அவற்றின் நட்பு நாடுகளையும் வளைத்துப் போட்டுக் கொள்ள முடியும் என்று அரசு திடமாக நம்பியிருக்கின்றது. அத்தகைய ஆதரவைத் திரட்டி, தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வதில் அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதுவே ஜெனிவா தொடர்பிலான அரச தரப்பு அரசியலின் யதார்த்த நிலைமை.
இத்தகைய அரசியல் பின்புலத்தில் தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது, எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றது என்பது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. தளர்வில்லாத செயற்பாட்டிற்கான உறுதியான தீர்மானத்துக்கும் உரியது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான நீண்டகால ஏக்கத்திற்கு அரசியல் ரீதியான முடிவு காணப்பட வேண்டும். அதற்குரிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்கள் இடம்பெற்ற ஆயுத முரண்பாட்டு நிலைமைகள் மீண்டும் இடம்பெறாத வகையில் உறுதியான முடிவுகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் அமைதி, ஐக்கியம் என்பன ஏற்படுத்தப்படவும் வேண்டும் – இதுவே ஐ.நா மனித உரிமை ஆணையாளரினதும், மனித உரிமைப் பேரவையினதும் நோக்கமாகும்.
ஆயினும் அரசு பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை அதற்குரிய கட்டமைப்புக்களின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் எழுத்தளவிலேயே எஞ்சிக் கிடக்கின்றன. செயல்வடிவங்களின் ஊடாக அவற்றுக்கு உயிரூட்டுகின்ற சக்தி ஐநாவுக்கு இல்லை என்பதே சர்வதேச நிலைமையின் யதார்த்தம்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தை எந்த வகையில் செயற்படச் செய்ய முடியும் என்ற கேள்விக்கு உடனடி பதில் ஏதும் காணப்படவில்லை.
குறிப்பாக மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்வதற்கு இலங்கை மீது அழுத்தம் கொடுக்கத்தக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் பரிந்துரைத்திருக்கின்றார். அந்த அறிக்கை பல்வேறு விடயங்களை உள்ளடக்கி கடும் சொற் பிரயோகத்தில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விரோத நிலைப்பாட்டைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றுவதாக ஐ.நாவிடம் உறுதிப்படுத்தி அதற்கான வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய அரசு அதனை மீறிச் செயற்பட்டு வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்தத் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையையும் தூக்கி எறிந்து பொறுப்பு கூற முடியாது என்று முரட்டுத் தனமாக மறுதலித்து நிற்கின்றது.
எனவே தீவிரமான இன, மதவாதப் போக்கு, இராணுவமய ஆட்சி, சர்வாதிகாரத்தை நோக்கிய நிலைப்பாடு என்பவற்றை மூர்க்கத்தனமாகக் கொண்டுள்ள இலங்கையை பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் வழிக்குக் கொண்டு வருவதென்பது இலகுவான காரியமாகத் தென்படவில்லை.
ஐ.நா மனித உரிமைப் பேரவையும், அதன் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய சர்வதேசம் வெறும் வாய்ச்சொற்களினாலும், தீர்மானங்கள் மற்றும் அறிக்கை வடிவங்களிலான அழுத்தங்களின் ஊடாக மட்டும் இலங்கையை பொறுப்புக்கூறச் செய்ய முடியாது. இதனை பட்டவர்த்தனமாகத் தனது செயற்பாடுகளின் மூலம் இலங்கை அரசு வெளிப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் நாட்டில் நீதியானதோர் ஆட்சியையும் குறிப்பாக இறுக்கமான பன்மைத்தன்மையைக் கொண்ட உறுதியான ஜனநாயக நிலைமையையும் சர்வதேசத்தினால் உருவாக்க முடியுமா என்பதும் கேள்விக்கு உரியது.
உரிய பொறிமுறைகளின் ஊடாக போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூறுவது, மனித உரிமை நிலைமைகளைப் பேணுவது உள்ளிட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது உடனடியாகச் செய்யப்படத்தக்க பணிகளல்ல. அவற்றுக்குக் காலம் எடுக்கும். ஒரு நீண்டகால திட்டத்தின் கீழ் துரித அக்கறையான செயற்பாட்டின் மூலமே அவற்றை நிறைவேற்ற முடியும்.
வழங்கப்பட்ட உறுதி மொழிகளையும் ஏற்றுக்கொண்ட உடன்பாடுகளையும் தனது வசதிக்கும், சுய அரசியல் இலாபத்திற்கும் பலிக்கடாக்களாக்கி காலத்தை இழுத்தடித்து, பொறுப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைக் கைவிடுவதே அரசாங்கத்தின் வழமையான நிலைப்பாடு.
இந்த நிலையில் எதிர்பார்க்கப்படுகின்ற ஐ.நாவின் பிரேரணையானது, எதிர்பார்ப்புகளுக்கமைய கடுமையானதாகவும், நிளைவேற்றப்பட வேண்டியதாகவும் அமைந்தாலும்கூட அரசாங்கம் முழுமையாக அதனைக் கடைப்பிடிக்குமா என்பது சந்தேகம். ஆகவே தொடர்ச்சியான அழுத்தமும் செயற்படு நிலைக்கான வெளித்தூண்டுதல்களும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
சர்வதேச நாடுகளோ ஐ.நா மன்றமோ கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படு நிலைக்குரிய தொடர்ச்சியான அழுத்தத்தையும், வெளித்தூண்டுதல்களையும் வழங்குமா என்பது நிச்சயமற்ற ஒன்றாகவே தெரிகின்றது. இந்த நிலையில் பாதிப்புக்கு உள்ளாகிய தமிழ்த்தரப்பினர் சர்வதேச இராஜதந்திர மட்டங்களில் தூண்டுவிசையாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது.
இராஜதந்திர மட்டத்திலான தூண்டுவிசை என்பது தமிழ்த்தரப்பின் கட்டமைக்கப்பட்ட ஒரு பொறிமுறை உருவாக்கத்தின் ஊடாகவே சாத்தியமாகக் கூடும். இத்தகைய பொறிமுறை அல்லது கட்டமைப்பு என்பது களத்தில் மட்டுமல்லாமல் புலம்பெயர் தளம், தமிழகம் மற்றும் தமிழகத்தையும் கடந்த நட்புச் சக்திகளை உள்ளடக்கிய இந்தியத் தளம் ஆகியவற்றுடன் சர்வதேச இராஜதந்திர களத்தின் ஆதரவையும் கொண்டதாக உருவாக்கப்பட வேண்டும்.
அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், (மண் மீட்பு, ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பிரச்சினைகளுக்காகப் போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற) போராட்ட சக்திகள், துறை சார்ந்த நிபுணர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட பல தரப்பினரையும் உள்ளடக்கியதாக இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
சிறுபான்மை இன, மத அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், தாயகப் பிரதேச கபளீகரம், கலாசாரப் பண்பாட்டு ரீதியான இன அழிப்புச் செயற்பாடுகள் என்பவற்றுக்கு துறைசார்ந்த நிலையில் போராட்டச் செயற்பாடுகளை களத்தில் முன்னெடுப்பதற்குரிய இராஜதந்திர ரீதியிலான வழிகாட்டல்களை இந்தக் கட்டமைப்பு வழங்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
இந்தப் போராட்டங்கள் களத்திற்கு வெளியில் தமிழகம், தமிழக எல்லையைக் கடந்து ஏனைய மாநிலங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் வழித்தடங்களை மேற்கொண்டு செயற்பட வேண்டியதும் இந்தக் கட்டமைப்பின் செயற்பாடாக இருத்தல் வேண்டும்.
அதேவேளை, இந்தக் கட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று முழு நேரமாக இராஜதந்திர மட்டங்களில் பல்வேறு தரப்பினருடனான தொடர்புகளை மேற்கொண்டு சர்வதேச அளவில் தனது செயற்படு தளத்தைக் கொண்டு இயங்க வேண்டியதும் அவசியம்.
இத்தகைய ஒரு கட்டமைப்பு ஐநா மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது அமர்வையொட்டி உருவாக்கப்பட வேண்டும். அந்த அமர்வு காலத்தில் இதனை உருவாக்க முடியாது. அது சாத்தியமில்லை. ஆனால் இந்த அமர்வின் பின்னரான நிலைமைகள் தமிழ்த்தரப்புக்கு சாதகமாக இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும்சரி, களத்திலும் புலத்திலும் இராஜதந்திர ரீதியான போராட்டச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
வலுமிக்கதோர் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு, ஒரு தசாப்த காலம் கடந்துள்ள நிலையில் ஜனநாயக வழிமுறையின் ஊடாகவே தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை, மற்றும் நிரந்தரமான இருப்புடன் கூடிய வாழ்வியல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குள் தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தப் போராட்டமானது, இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட களநிலை என்ற எல்லையைக் கடந்து பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய கட்டாய நிலைமை உருவாகி இருக்கின்றது.
எனவே பரந்த அளவிலான போராட்டச் செயற்பாட்டுக்குரிய கட்டமைப்பை உருவாக்குவது குறித்து உடனடியாகச் சிந்திக்க வேண்டும். செயற்படவும் வேண்டும்.
பி.மாணிக்கவாசகம்