சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி தெரிவிப்பதாக சிவகார்த்திகேயன் கூறி உள்ளார்.
2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134 பேருக்கு விருது வழங்கப்பட்டது. விருதுபெற்ற திரையுலக பிரபலங்ளுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு கிடைத்த விருதை தன் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
‘சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ என சிவகார்த்திகேயன் கூறி உள்ளார்.
அத்துடன், முதலமைச்சரிடம் இருந்து விருது பெற்றபோது எடுத்த புகைப்படம் மற்றும் அந்த விருதை தாயாரிடம் கொடுத்து, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றபோது எடுத்த புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.