ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றினால் நாடு இரண்டாக உடையும் எனும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்து எமக்குத்தனித் தமிழீழத்தைப் பெற்றுத்தந்து விடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அதேநேரம் வடக்கு, கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்றே சரத் வீரசேகர செயற்படுகின்றார். ஆகவே, தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது எனக் கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மன்னாரில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் காவல் துறை யினர் தேடித் தேடி விசாரிக்கின்றார்கள்.
நீதிமன்ற உத்தரவை மீறினார்கள் எனவும், நீதிமன்றத்தைத் தமிழர்கள் அவதித்துள்ளார்கள் எனவும் காட்டுவதற்காகவே இந்த முயற்சி நடைபெறுகின்றது.
இதேநேரம் காவல் துறையின் நடவடிக்கையானது நீதிமன்ற ஆணையை நாம் புறக்னிக்கின்றோம் என்ற அச்சத்தைக் கொண்டுவந்து எமது மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கின்ற மற்றும் ஐ.நா. சபையில் எமது கோரிக்கைகளை இல்லாது செய்கின்ற முயற்சியாகும்.
அரச தரப்பினர், இறுதிப் போர் வெற்றியை பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம் என்று கொண்டாடியதுடன் பயங்கரவாதத்தை அழிப்பது எப்படி என்றுபாடம் எடுக்கப்போவதாகவும் கூறினார்கள்.
அந்தவகையில் உலக நாடுகள் நிச்சயமாக எங்களுடைய பக்கம் கரிசனை காட்ட வேண்டும். அதுவே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது” என்றார்.