தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட்- மழையால் 2-ம் நாள் ஆட்டம் ரத்து

201611130940204330_cricket-rain-washes-out-day-two-of-australia-v-s-africa_secvpfபலத்த மழையின் எதிரொலியாக தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் தொடரின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹோபர்ட் நகரில் உள்ள பெல்லரைவ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தோன்றியதால், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

அவுஸ்ரேலியா அணியின் வார்னர் மற்றும் பர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டு பிளிசிஸின் எண்ணம் வீண்போகவில்லை. அவர் எதிர்பார்த்ததுபோல் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் ஒத்துழைத்தது. அதை தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிலாண்டர், அப்பாட் ஆகியோர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டனர். வார்னர் (1), கவாஜா (4) ஆகியோரை பிலாண்டர் வெளியேற்ற, பர்ன்சை (1) அப்பாட் வெளியேற்றினார்.

ஒருபுறம் அவுஸ்ரேலிய  கப்டன் ஸ்டீவன் ஸ்மித் மட்டும் நிலைத்து நிற்க மறுமுனையில் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர். வோக்ஸ் 0 ரன்னிலும், மென்னியை 10 ரன்னிலும், லயோனை 2 ரன்னிலும் பிலாண்டர் வெளியெற்றி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோரை அப்பாட் வெளியேற்றினார். இதனால் ஆஸ்திரேலியா 32.5 ஓவர்கள் மட்டுமே எதிர்கொண்டு 85 ரன்களில் சுருண்டது. ஸ்மித் மட்டும் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவர் 80 பந்துகளை சந்தித்தார். மற்ற வீரர்கள் 25 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ள முடியவில்லை.

பின்னர், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் குக் 23 ரன்னும், எல்கர் 17 ரன்னும் சேர்த்தனர். அதன்பின் வந்த அம்லா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 47 ரன்கள் அடித்தார். ஆனால், டுமினி 1 ரன்னிலும், டு பிளிசிஸ் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் வந்த பவுமா மற்றும் டி காக் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் இருவரும் பார்த்துக் கொண்டனர். தென் ஆப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.

பவுமா 38 ரன்களுடனும், டி காக் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய நிலவரப்படி, தென் ஆப்பிரிக்கா 86 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இன்னும் கூடுதலாக 150 ரன்களுக்குமேல் அந்த அணி எடுத்தால் அவுஸ்ரேலியா தோல்வியை சந்திப்பது உறுதியாகும் என்ற நிலையில் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் தொடங்க வேண்டிய ஆட்டம் தொடர் மழையினால் ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.