பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆளும் கட்சிக்குள் பலம் இழந்து வருகிறாரா? ஆளும் கட்சிக்குள், அவரை ஒதுக்கித் தள்ளும் நிலை உருவாகி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், அண்மையில் சில சம்பவங்கள் இடம்பெற்றன; இடம்பெற்றும் வருகின்றன.
தரை ஓடு போன்ற செரமிக் பொருட்களை இறக்குமதி செய்வதை, அரசாங்கம் ‘கொவிட் 19’ நோயால் ஏற்பட்ட பயணக் கஷ்டங்களின் காரணமாக, கடந்த வருடம் ஜூலை மாதம் தடை செய்திருந்தது. அப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதமர் அண்மையில் அத்தடையை நீக்கும் வகையில், ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு இருந்தார்.
ஆனால், ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம், அந்த வர்த்தமானியை அமுல் செய்வதை நிறுத்துமாறு, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கும் வர்த்தக வங்கிகளின் நிறைவேற்று அதிகாரிகளுக்கும், அன்றே கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு எதிராக, பிரதமர் எதையும் செய்யவில்லை. அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவ்வாறான சம்பவம் இடம்பெற்று இருந்தால், ஏற்றுமதி -இறக்குமதி கட்டுப்பாட்டாளர், நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொண்டு இருப்பார்.
அதையடுத்து, “நீர் மூலம் ‘கொவிட்-19’ நோய் பரவுவதில்லை” என்ற இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, நாடாளுமன்றத்தில் பெப்ரவரி ஒன்பதாம் திகதி தெரிவித்திருந்தார். அக்கருத்தைச் சுட்டிக்காட்டி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், ”‘கொவிட்-19’ நோயால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய, இடமளிப்பீர்களா” என, பெப்ரவரி 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர், “நாம் அடக்கம் செய்ய இடமளிப்போம்” என்றார்.
ஆனால், பிரதமரின் கருத்து, வெறும் ஆலோசனை மட்டுமே என்றும் சுகாதார நிபுணர்களே அந்த விடயத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்றும், மறுநாள் இராஜாங்க அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். சுகாதார அமைச்சின் அதிகாரிகளும், “பிரதமரின் கருத்து, சட்டமாகாது” என்றும் “அதனுடன் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட வேண்டும்” என்றும் கூறினர்.
பிரதமரைப் புறக்கணித்து, அரசாங்கம் செயற்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பிய, இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
மூன்றாவதாக, ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகையுடன் நடத்திய பேட்டியொன்றின் போது, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, “ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். “ஜனாதிபதியை, ஜனாதிபதி செயலகத்துக்குள் முடக்கி வைப்பது, பொருத்தமானதல்ல” என்றும் “அவருக்கும் சாதாரண எம்.பிக்களுக்கும் இடையிலான தொடர்பு பலவீனமடைகிறது” என்றும் கூறியிருந்தார்.
தற்போது, மஹிந்தவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக இருக்கிறார். விமலின் இந்தக் கூற்றை, பொதுஜன பெரமுனவினர் பலர் எதிர்த்தனர். ஆனால், ஆளும் கட்சியில் இருக்கும் சிறிய கட்சிகளான, உதய கம்மன்பிலயின் ‘பிவிதுரு ஹெல உருமய’, வாசுதேவ நாணயக்காரவின் இடதுசாரி முன்னணி போன்ற கட்சிகள் ஆதரித்தனர். எமது கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்று கூற, வீரவன்சவுக்கு உரிமை இல்லை என்றும் “அவர் தமது கட்சியைப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றும், அப்பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது தெரிவித்தார்.
அத்தோடு, “பொதுஜன பெரமுனவை ஆட்சிக்குக் கொண்டு வருவதில், வீரவன்ச பெரிதாக எதையும் செய்யவில்லை” என்றும் “அவரது கட்சி, பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக, இரண்டு இலட்சம் வாக்குகளைத் தான் கொண்டு வந்திருக்கும்” என்றும் கூறினார்.“ பொதுஜன பெரமுனவின் தலைமையை மாற்ற வேண்டும் என்று கூறியதற்காக, வீரவன்ச பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றும் பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியிருந்தார்.
“வீரவன்ச மீதான, மக்களின் நம்பிக்கை அருகி வந்ததன் காரணமாகவே, பொதுஜன பெரமுன, கடந்த பொதுத் தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் சரத் வீரசேகரவை நிறுத்தியது” என்று காரியவசம் கூற, “வீரவன்சவின் இரண்டு சகாக்கள், வெளிநாட்டு உளவுப் பிரிவொன்றிடம் இருந்து சம்பளம் பெறுகிறார்கள்” என பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா கூறினார்.
இதற்கு, ஆளும் கட்சிக் கூட்டமொன்றில் பதிலளித்த வீரவன்ச, “பொதுஜன பெரமுனவை ஆட்சிக்குக் கொண்டு வரவும் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கவும் உழைத்தமை தவறென்றால், நான் மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன்” எனக் கூறினார். “எந்தவொரு கட்சியினதும், தலைமையைப் பற்றிப் பேச, நாட்டில் எவருக்கும் உரிமை இருக்கிறது” என்றும் அவர் கூறினார். இந்த விவாதம், இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த விவாதம், விலைவாசி போன்ற பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, அரசாங்கம் அரங்கேற்றி இருக்கும் நாடகம் எனச் சிலர் கூறுகின்றனர். சிலர், இது ஆளும் கட்சிக்குள் அமைச்சர் வீரவன்சவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசலின் வெளிப்பாடு என்றும் கூறுகின்றனர். ஏனெனில், 2015 ஆம் ஆண்டே, வீரவன்ச, “மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு, பசில் ராஜபக்ஷவே காரணம்” எனக் கூறியிருந்தார்.
காரணம் எதுவாக இருப்பினும், இந்தச் சர்ச்சையானது, அரசியல் அநாகரிகத்தின் மற்றொரு வெளிப்பாடு. ஏனெனில், வீரவன்சவை ஆதரிப்போரும், அவரை எதிர்ப்போரும், நன்றி கெட்டவர்களாகவே நடந்து கொள்கின்றனர். அதேவேளை, அரசியல் நோக்கத்துக்காக எந்தளவு கீழ்த்தரமாகவேனும் நடந்து கொள்ளத் தயார் என்றும், அவர்கள் உலகுக்குக் காட்டிக் கொள்கின்றனர்.
ராஜபக்ஷர்களை மீண்டும் பதவிக்குக் கொண்டு வருவதில், வீரவன்சவின் பங்கை, பொதுஜன பெரமுனவினர் மறுப்பதானது, ‘நன்றி மறப்பது’ என்பதன் உச்சக் கட்டம்; மட்டுமல்லாது, வரலாற்றைத் திரிபு செய்வதாகவும் அமைகிறது. எந்தவொரு பொதுத் தேர்தலுக்குப் பின்னரும், ஒரு மாதத்துக்குள் தோல்வி அடைந்த தரப்பினர், மீண்டும் பதவிக்கு வருவதற்கான முயற்சிகளில், ஈடுபட்டதாக, வரலாற்றில் எங்கும் ஆதாரங்கள் இல்லை. வீரவன்ச உள்ளிட்ட, சில சிறு கட்சிகளின் தலைவர்களே, 2015 ஆம் ஆண்டு அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டனர். அவ்வாண்டு பெப்ரவரி மாதமே அவர்கள், ‘மஹிந்தவுடன் எழுவோம்’ என்ற தலைப்பில், பொதுக் கூட்டத் தொடரொன்றை ஆரம்பித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில், தமது அங்கத்துவத்தை இரத்துச் செய்வார் என்ற பயத்தில், மஹிந்தவும் அப்போது அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த பொதுத் தேர்தலுக்காக, தமக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய இடமளிக்க மாட்டார் என்ற பயத்தில் மஹிந்தவின் ஆதரவாளர்களும் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.
ஸ்ரீ ல.சு.கக்குள்ளும் நாடாளுமன்றத்திலும் தமக்குப் பெரும்பான்மை பலம் இருந்தும், அந்தப் பலத்தைப் பாவித்து, ஸ்ரீ ல.சு.க தலைமையைத் தம்வசமே வைத்திக்க முடியுமாக இருந்தும், ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தை நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலம் கவிழ்க்க முடியுமாக இருந்தும், மஹிந்த அப்போது அவ்வாறு செய்யவில்லை. மைத்திரி நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை, தமக்கு எதிராகப் பாவிப்பார் என அவர் பயந்தமையே, அதற்குக் காரணமாகும்.
உண்மையிலேயே வீரவன்சவின் தேசிய சுதந்திரக் கட்சி, உள்ளிட்ட சிறு கட்சிகள் உருவாக்கிய அலையைப் பாவித்தே பசில் ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவைக் கட்டி எழுப்பினார். தனிப்பட் முறையில் பசில், இனவாதத்தை அரசியலுக்காகப் பாவிக்காவிட்டாலும், அவர், அந்தச் சிறு கட்சிகள் இனவாதத்தைச் சுலோகமாகப் பாவித்து உருவாக்கிய அலையையே, பயன்படுத்தினார்.
இச்சிறு கட்சிகளும், மஹிந்தவின் மீதான பற்றின் காரணமாக, அவ்வாறு செயற்படவில்லை. அவர்களது அரசியல் இருப்புக்காக, வேறு வழியே அப்போது இருக்கவில்லை. அவர்களது நிலை, வாழ்வா சாவா என்ற இக்கட்டான ஒன்றாக இருந்தது. அவர்கள், அந்த அலையை உருவாக்கினாலும் அவர்களால், பொதுஜன பெரமுனவைப் போன்றதொரு கட்சியை உருவாக்கவும் முடியாது.
ஏனெனில், அவர்கள் நடத்திய கூட்டங்களுக்குச் சென்றவர்கள், அவர்களது கட்சிக்காரர்கள் அல்ல; மஹிந்தவின் ஆதரவாளர்களே! சுருங்கக் கூறின், சிறு கட்சிகள் உருவாக்கிய அலையின்றி, அவ்வளவு விரைவாகப் பசிலால் பொதுஜன பெரமுனவைப் போன்ற கட்சியொன்றைக் கட்டி எழுப்பியிருக்க முடியாது.
அதேவேளை, ராஜபக்ஷர்களில் எவரும், தலைமை தாங்காது, விமல் போன்ற சிறு கட்சித் தலைவர்களாலும் அவ்வாறானதொரு கட்சியை, உருவாக்கியிருக்க முடியாது.
இரு சாராரும், இந்த வரலாற்றை, இவ்வளவு இலகுவாக மறந்து, ஒருவருக்கு எதிராக, இன்னொருவர் ‘சேற்றை’ வாரி இறைக்க முடியுமாக இருந்தால், இவர்களது அரசியல், எவ்வளவு சுயநலன் மிக்கது என்பதை, உணர முடிகிறது.
இனப்பிரச்சினை, காணாமற்போனோர் பற்றிய பிரச்சினை, ‘கொவிட்-19’ நோயால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்தல் போன்ற எந்தவொரு விடயம் தொடர்பாகவும், இவர்கள் சுயாதீனமாகச் சிந்தித்து முடிவு செய்யப் போவதில்லை.அதற்கான சவால்களை எதிர்நோக்க, அவர்களது சுயநல அரசியல் இடமளிப்தில்லை என்பதற்கு, இவர்களது இந்தச் சண்டை, சிறந்த ஆதாரமாகும்.
-எம்.எஸ்.எம். ஐயூப்