கடந்த 2020ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சமாகப் பதிவாகியுள்ளது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 41 ஆயிரமாக உள்ளது. கடந்த டிசம்பர் 2020 காலக்கட்டத்தை கொரோனாவுக்கு முன்னரான டிசம்பர் 2019யுடன் ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று சூழலும் அதன் பின்னரான ஆஸ்திரேலிய நடைமுறையும் ஏற்படுத்திய இவ்வீழ்ச்சி ஆஸ்திரேலிய வரலாற்றில் இதற்கு முன் காணப்படாத ஒரு நிலை எனக் கூறப்படுகின்றது. சுற்றுலா சென்றவர்கள், Working Holiday Makers விசாவில் சென்றவர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வேலை விசா கொண்ட பலர் இவ்வாறு வெளியேறிவர்களில் உள்ளடங்குகின்றனர்.
சமீபத்தில் வெளியான ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகத்தின் கணக்குப்படி, ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பார்வையாளர்கள் மற்றும் Working Holiday Makers விசாவாசிகள் வரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை விட தற்போது 31 ஆயிரம் மாணவர்கள் குறைந்து காணப்படுவதையும் இக்கணக்கு சுட்டிக்காட்டுகின்றது.
இதில் குறிப்பாக மார்ச் மாதம் பெருந்தொற்று சூழல் ஏற்பட்ட பிறகு முதல் மூன்று மாதத்தில் மட்டும் 143,000 தற்காலிக விசாவாசிகள் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வீழ்ச்சி ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி ஆஸ்திரேலிய கல்வி மற்றும் சுற்றுலாத்துறையை கடுமையாகப் பாதித்திருக்கிறது.