மேர்வின் சில்வா வட, கிழக்கிற்கு வரும்போது பாதுகாப்பின்றி வருவதைத் தவிர்கவேண்டும் என ரவிகரன் தெரிவித்துள்ளார்.
”மேர்வின் சிலவா வட கிழக்குத் தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப்பற்றியோ பூரணமாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கின்றேன். அதேவேளை அவர் வட, கிழக்கிற்கு பாதுகாப்பின்றி வருவதனைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.” என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
”காவல்துறை சீருடையில் தான் இருந்திருந்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களின் கால்களை முறித்திருப்பேன்” என மேர்வின் சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார். மேர்வின்சில்வாவின் இக் கருத்திற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் போராட்டமானது ஜனநாயக ரீதியான போராட்டமாகும். கிட்டத்தட்ட எமது முல்லைத்தீவு மவட்டத்தில் மக்கள் குடியிருப்புக்கான நிலங்களில் 50வீதமான நிலங்கள் திணைக்களங்களாலும், படையினர் மற்றும் தென்னிலங்கை மீனவர்கள், வன இலாகா, வன ஜீவராசிள் திணைக்களம், மகாவலி எல், தொல்லியல் திணைக்களம் போன்றவற்றினூடாக அபகரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வடகிழக்கினைப் பொறுத்தவரையிலும் இதே நிலையே காணப்படுகின்றது.
இதனைவிட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்னும் நோக்கோடும்,சிறையில் வாடுபவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும், மலைய மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும், சகோதர இனத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதைச்சுட்டிக்காட்டி இந்தப் போராட்டமானது மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இவர் இந்த போராட்டத்தினை கொச்சைப் படுத்தும்வகையிலே கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இவருடைய இவ்வாறான கருத்து கோமாளித்தனமாகவே இருக்கின்றது. எனவே இவருடைய கருத்துக்களால் எனக்கு சிரிப்பே வருகின்றது. இவர் வட கிழக்குத் தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப்பற்றியோ பூரணமாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கின்றேன்.
அதேவேளை இவர் வட, கிழக்கிற்கு பாதுகாப்பின்றி வருவதனைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன். அத்தோடு காவல்துறை சீருடையினைத் தான் அணிந்திருந்தால், இந்த போராட்டத்தில் பங்குபற்றியவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என்கின்றார். அவ்வாறு உடைக்கக்கூடிய நிலையில் தமிழர்களின் கால்கள் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும் இந்த நாட்டிலே காவல்துறை சீருடையில் இருந்தால், இவர் கூறுவதைப் போன்று மக்களின் கால்களை உடைக்கமுடியுமா? இவரின் இத்தகைய கருத்து காவல்துறையினரின் செயற்பாடுகளையும் அவர்களின் கடமைகளையும் கேலிசெய்வதாக அமைந்துள்ளதுடன், காவல்துறையினரின் சீருடையை கேலிசெய்வதாகவே அமைந்துள்ளது. நிச்சயமாக இவ்வாறானவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்” என்றார்.