தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்திகளுக்கு உள்ளாகியிருந்த சுமந்திரனின் பாதுகாப்பை அரசங்கம் மீளப்பெற்று அவரை பலவீனப்படுத்தியதன் மூலம் அவரை மக்களுடன் நெருக்கமாக்கியிருக்கின்றது
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி பெரெழுச்சியுடன், நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில், இந்தப் பேரணி எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்விகளும் கூடவே எழுந்திருக்கின்றன. இவ்வாறானதொரு பேரணியை அரசாங்கமும் எதிர்பார்க்கவில்லை, தமிழர் தரப்பும் எதிர்பார்க்கவில்லை.
பேரணிக்குப் பின்னர் வெளியிடப்படும் கருத்துக்களும், எடுக்கப்படும் நடவடிக்கைகளுமே, இது ;ஒரு விளைவுகளை ஏற்படுத்தாத பேரணி அல்ல என்பதை தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. பேரணி இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது அரசாங்கத்துக்குச் சார்பான ; பேரணி என்றும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடாது என்றும் கூறியிருந்தார்.
ஜனநாயகப் போராட்டங்களை நடத்தும் சுதந்திரம் தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதை இந்தப் பேரணி சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறும் எனவும் அவர் தனது கருத்துக்கு நியாயம் கற்பித்திருந்தார். அவர் இந்தக் கருத்தைக் கூறியது, பேரணியைப் பலவீனப்படுத்துவதற்காகத் தான். அவர் அதனைக் கூறிய பின்னர் தான், பேரணி இன்னும் வீரியம் பெற்றது.
இந்தப் பேரணியைத் தடுக்க பொலிஸார் நீதிமன்றங்களின் மூலம் தடை உத்தரவைப் பெற்றும், வேறு பல இடையூறுகளை ஏற்படுத்தியும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், ஜனநாயகப் போராட்டங்களுக்கான இடைவெளி குறுகியதாகவே உள்ளது என்ற செய்தியை சர்வதேசத்துக்கு வழங்கும் என்பதை டக்ளஸ் தேவானந்தா மறந்து விட்டார்.
அதுபோன்றே, இந்தப் பேரணிக்குப் பிறகு கிழக்கில் பிரதேச வாதம் பேசி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளுக்கு கிலி ஏற்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் கிழக்கில் பேராதரவு வழங்கியதும், அவர்களுடன் முஸ்லிம்கள் இணைந்து கொண்டதும், அவர்களால் எதிர்பார்க்கப்படாத ஒன்று
பிரதேசவாதத்தையும், முஸ்லிம்களுடனான பிளவுகளையும் முன்னிறுத்தி, தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக திருப்பியவர்களுக்கு, இதுபோன்ற தமிழ்த் தேசிய எழுச்சி ஜீரணிக்க முடியாத ஒன்று தான். பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ஒரு கூட்டத்தில் இந்தப் பேரணியைப் பற்றி வெளிப்படுத்தியிருக்கின்ற கருத்துக்கள், அதனையே உணர்த்துவனவாக உள்ளன.
அவர், இதனை கூட்டமைப்பு தலைமையை கைப்பற்றுவதற்கான சுமந்திரனின் பேரணியாக அடையாளப்படுத்த முனைந்தார். வடக்கிலும் கிழக்கிலும், தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்படும், இரண்டு முக்கிய அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டில் இருந்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில், தெற்கிலிருந்து வருகின்ற கண்ணோட்டங்கள் வேறு மாதிரியானவையாக உள்ளன.
ஜெனிவா விவகாரம் தீவிரமான கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் செயல் என்று சீற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா. அதேவேளை, உதய கம்மன்பில, கெஹலிய ரம்புக்வெல்ல போன்ற அரசாங்கத்தின் பேச்சாளர்கள், இது ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற சதித்திட்டம் என்றும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே இதில் பங்கேற்கின்றனர். தமிழ் மக்கள் இதற்குப் பின்னால் செல்லமாட்டார்கள் என்றும் கூறிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் வாயை அடைக்கும் வகையில், இறுதி இரண்டு நாட்களிலும் மிகப் பெரியளவு மக்கள் கூட்டம் பேரணியில் பங்கேற்றிருந்தது. அதனால் அவர்கள், இதனை தேசத்துரோகமாக, நாட்டை காட்டிக் கொடுக்கின்ற செயலாக அடையாளப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே, இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பங்கிற்கு கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனை நாட்டைப் பிளவுபடுத்தும் சதித் திட்டம் என்று அவர் கொந்தளித்திருக்கிறார்.
பிரபாகரனுடன், ஈழக்கனவை மண்ணுக்குள் புதைத்து விட்டோம், இனி நாட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. என்றவர்கள், நாட்டைப் பிரிக்கும் சதித்திட்டம் என்று புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். அதேவேளை, இவ்வாறானதொரு பேரணி சிறுபான்மையின மக்களுக்கு நம்பிக்கையளித்திருக்கிறது.
பேரணியின் வெற்றி இந்தளவுக்கு எதிர்பார்க்கப்படாத ஒன்று என்பதை, அதில் முன்னின்ற பாராளுமன்ற உறுப்பினர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். சுமந்திரன், சாணக்கியன் ஆகிய இருவரும் இந்தப் பேரணியின் தூண்களாக இருந்தவர்கள்
சுமந்திரன் தொடர்பாக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், மத்தியில் மட்டுமன்றி, சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் ஆழமான அதிருப்தியும், விமர்சனங்களும் இருப்பது உண்மை. ஆனாலும் இந்தப் பேரணியில் அவர்களின் பங்கை மெய்ச்சிப் பாராட்டும் நிலை ஒன்று உருவாகியிருக்கிறது. அவர்கள் இருவரும் துணிந்து முன்னே சென்றது தான், பொலிகண்டி வரைக்கும் அது நீட்சி பெற்றதற்கு அடிப்படைக் காரணம்.
முஸ்லிம்களின் பங்களிப்பை தமிழ் மக்கள் இந்தளவுக்கு எதிர்பார்க்கவில்லை. முஸ்லிம்களின் தலைமைகளும், மனோ கேணேசன், போன்றவர்களும் இந்தப் பேரணியை பலப்படுத்தி தாங்களும் ஒன்றாக நிற்கிறோம் என்ற செய்தியை வழங்கியிருக்கிறார்கள்
இதனை அரசாங்கம் சற்றும் எதிர்பார்த்திருக்காது ;சிங்கள பௌத்த வழி ஆட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு அரசாங்கத்தின் முன்பாக, சிறுபான்மையின மக்கள் ஒன்று திரள ஆரம்பித்திருப்பது ஒரு தெளிவான சமிக்ஞை தான். தனித்தனியாக தமது பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருந்த மூன்று சிறுபான்மைச் சமூகங்கள், ஒரே குரலாக ஒலிக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அது வலுவானத்தாக இருக்கும் என்று நம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதுவரையில் பிளவுபடுத்தி வைத்திருந்தவர்கள், தமது கண்முன்னே எதிர்த்துக் கிளர்ந்தெழும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருப்பது அரசாங்கத்துக்கு கடினமானதாக இருக்கலாம். இந்தப் பேரணியின் உச்ச வெற்றியாக குறிப்பிடக் கூடியது. சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு விலக்கப்பட்டது தான். உடனடி விளைவு அது.
சுமந்திரன் அதிரடிப்படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டு பேரணியில் சென்றதால் பாதுகாப்பை விலகியதாக கூறியிருக்கிறார் சரத் வீரசேகர. பாதுகாப்பு இல்லையென்றால் அவர் பேரணியில் சென்றிருக்கமாட்டார் என அவர் தெரிவித்திருக்கிறார்.
இது பழிவாங்கல் என்பது, அப்பட்டமாக தெரிகிறது ;இது சுமந்திரனுக்கு இன்னும் கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கிறது இதுபோன்ற பாதுகாப்புகளின் மூலம். தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருந்த சுமந்திரனை அரசாங்கம் இன்னும் அவர்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்த்திருக்கிறது.
அதுமட்டுமன்றி முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து விடுவார்களோ எனத் தோன்றிய அச்சமும் கூட, இந்தப் பேரணியின் ஒரு கோரிக்கையான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இணக்கும் முடிவுக்கு அரசாங்கம் வருவதற்கு காரணமாக அமைந்திருக்க்கிறது
இவ்வாறான ஒரு பேரணி நாட்டில் பரவலாக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஆச்சரியமானது தான்.
இந்தப் பேரணி சர்வதேச அளவிலும் கவனத்தைப் பெற்றிருக்கிறது என்பதற்கும் இந்தப் பேரணிக்கு சர்வதேச ஊடகங்களில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இந்திய ஊடகங்களின் கவனம் அதிகளவில் திரும்பியிருந்தது.
ஆனாலும், கொழும்பு ஊடகங்கள் இந்த பேரணியை பெரியளவில் கண்டுகொள்ளாதது குறித்து அமெரிக்க தூதுவர் வெளிப்படுத்தியிருக்கும் கருத்து, கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சர்வதேச சமூகம் இதனை எந்தளவுக்கு உன்னிப்பாக அவதானித்திருக்கிறது என்பதும், ஜனநாயக போராட்டங்களின் முக்கியத்துவத்தை அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
மொத்தத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி எதிர்பாராத விளைவுகளை எதிர்பாராத நேரத்தில் ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் உண்மை.
கபில்