ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருந்த இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசா சுமார் 6 ஆண்டுகள் மனுஸ்தீவு தடுப்பு முகாமிலும் பின்னர் மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலும் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தற்காலிக இணைப்பு விசாவில் வழங்கப்பட்டு ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
“கடந்த கால சித்ரவதைகளிலிருந்து மீள எனக்கு கொஞ்சம் காலம் தேவை. என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்த முடிவை இன்னும் நான் எடுக்கவில்லை. ஏனெனில் என்னிடம் 6 மாத கால விசா மட்டுமே உள்ளது,” எனக் கூறியிருக்கிறார் தனுஷ் செல்வராசா.
இந்த 6 மாத இணைப்பு விசா கொண்ட ஓர் அகதி, ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார். அதே சமயம், அவர்களுக்கு அங்கு கல்விக் கற்க அனுமதியில்லை.
மருத்துவ உதவியைப் பொறுத்தமட்டில் இவ்வாறான விசாவில் உள்ள அகதிகளுக்கு Medicare எனும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகின்றது. ஆனால், எவ்விதமான அரசின் பொருளாதார உதவிகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு படகு வழியாக வந்த அகதிகளுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டாலும் அவர்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைப்பதில் ஆஸ்திரேலியாவில் பெரும் சிக்கல்கள் உள்ளன. அவர்களின் எதிர்காலம் என்பது வேறொரு நாட்டில் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டு நிரந்தரமாக மீள்குடியேறுவது, அல்லது சொந்த நாட்டுக்கே திரும்புவது என்ற வகையிலேயே உள்ளது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்த மட்டில், படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள் ஒருபோதும் நிரந்தரமாக இங்கு குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பதை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.