அவுஸ்திரேலியாவிற்கு வேலைக்காக சென்ற தமிழ் பெண், அங்கு வேலை செய்த இடத்தில் அடிமையாக நடத்தப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2007 முதல் 2015-ஆம் ஆண்டு வரை ஒரு பெண்ணை அடிமையாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அப்பெண் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்மணி இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்தவர், 60 வயது மதிக்கத்தக்கவராக இருக்கும் அவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வெறும் 40 கிலோ எடை மட்டுமே இருக்கிறார். கடந்த 2007-ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியா சென்ற அவர், அங்கு தம்பதியினரின் மூன்று குழந்தைகளை பராமரிப்பதற்காகவும், அவர்களின் விட்டு வேலைக்காகவும் சென்றுள்ளார்.
முதலில் அவர் ஆறு மாத சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அதன் பின் அவரின் விசா மற்றும் பாஸ்போர்ட் கடந்த 2011-ஆம் ஆண்டு காலாவதியாகியுள்ளது.
ஆரம்பத்தில் அந்த குடும்பத்திற்கு வேலைக்கு சேர்ந்தவர், அதன் பின் அடிமை போல் நடத்தப்பட்டுள்ளார். அவரை யாருடனும் குறித்த தம்பதியினர் பேசவிடாமல் வைத்துள்ளனர்.
சுமார் எட்டு ஆண்டுகளாக இந்த கொடுமை நடந்துள்ளது. அந்த இந்திய பெண், சிறுநீர், கழிவுகள் கிடந்த ஒரு அறையில் அடிமைப் போன்று இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த வழக்கு விசாரணை கடந்த புதன் கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இதன் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டு மாநில அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதால், வழக்கு தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த தம்பதியினர் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளனர். அந்த பெண்ணை நாங்கள் நன்றாகவே கவனித்து வந்ததாக கூறியுள்ளனர். வழக்கின் தொடர் விசாரணையின் போதே அந்த தமிழ் பெண் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்? இப்போது எப்படி தெரிந்தது என்பது குறித்த முழு விபரம் தெரியவரும்.
தம்பதியினர் இடம் இருந்து மீட்கப்பட்டுள்ள தமிழ் பெண்ணின் பெயர், புகைப்படம் குறித்து எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை, பாதுகாப்பு காரணங்களுக்காக அடிமைப்படுத்தியதாக கூறப்படும், தம்பதியினரின் பெயரும் வெளியிடப்படவில்லை.
Eelamurasu Australia Online News Portal