அரசியல் கட்சி ரீதியாக மாறுபட்டிருப்பினும் மைத்திரியும் ரணிலும்கூட ராஜபக்சக்களின் இனத்துவ மனப்பாங்குக்கு வேறுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
அமெரிக்க வல்லரசின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 8ம் திகதி மக்கள் அளித்த வாக்குகளால் தெரிவானார்.
கருத்துக் கணிப்புகளையும், அரசியல் பகுப்பாய்வுகளையும், சர்வதேச ஊடகங்களின் ஆருடங்களையும் பொய்யாக்கி ஒரு சாதனை படைத்துள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்க அரசியலில் முன்னர் எந்தவொரு பதவியும் வகித்திராத இவர், ஜனாதிபதிப் பதவிக்கு வந்துள்ள முதலாவது கோடீஸ்வர வர்த்தகர் என்பது இன்னொரு சாதனை.
தேர்தல் பரப்புரைக் காலத்தில் சர்ச்சைகளின் நாயகன் என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட ட்ரம்ப், அமெரிக்காவில் அமெரிக்கர்கள் தங்கள் உரிமையைப் பெறவேண்டுமென்ற சுலோகத்தையே தமது பரப்புரை வாசகமாகக் கொண்டிருந்தார்.
வெள்ளையின அமெரிக்கர்கள் என்னும் பணக்காரர்களையே குறிவைத்து, அமெரிக்கர்களுக்கே இந்நாடு சொந்தமானது’ என்ற கருத்தை மறைபொருளாகவும் நாசூக்காகவும் தமது பரப்புரையில் இவர் முன்வைத்தார்.
பல அமெரிக்கர்கள் பகிரங்கமாகச் சொல்ல விரும்பியும், சொல்ல முடியாது தவித்த இக்கருத்து தேர்தலின்போது இவருக்கு எதிர்பாராத வாக்குகளை அள்ளிக் கொடுத்தது.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அமெரிக்க குடிமகனே அல்ல என்ற கருத்தை 2012ல் ட்ரம்ப் வைத்தபோதே, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கருவாக அது உருவெடுத்தது.
ட்ரம்பின் வெற்றியும் ஹிலாரியின் தோல்வியும் இப்போது சர்வதேச அரங்கில் பட்டிமன்றமாகியுள்ளது. ரி~pமூலம், நதிமூலம்போல் இதற்கான அடிமூலத்தைக் கண்டுபிடிக்க முடியாதிருப்பினும் பலவாறான பரிசோதனைகளும் வாதப்பிரதிவாதங்களும் குரங்குவால்போல் நீண்டு கொண்டேயிருக்கும்.
இதற்கிடையில், 2010ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட வேண்டுமென்ற குரல்களும் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதியை ஜனநாயகக் கட்சியே உருவாக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும், இரண்டாவது தடவையாக ட்ரம்ப் வெற்றி பெறுவதைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கமும் இதன் பின்னணியில் உள்ளன.
சில உலகத் தலைவர்களிடமிருந்து வெளிவந்துள்ள வாழ்த்துகளும் கருத்துகளும் சற்று உற்று நோக்க வைக்கின்றன. ரஸ்ய அரசாங்கத்தின் மூத்த அதிகாரியொருவர் இன்டர்ஃபக்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வழங்குகையில், தேர்தல் பரப்புரைக் காலத்தில் ட்ரம்பின் உள்நாட்டு பயண விபரங்களைத் தாம் தெரிந்து வைத்திருந்ததாகக் கூறியுள்ளார்.
ரஸ்யாவுக்கும் ட்ரம்புக்குமிடையில் தேர்தல் வேளையில் சிலபல தொடர்புகள் இருந்ததென்று ரஸ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி ரயப்கொவ் சொல்லி வருகிறார்.
ட்ரம்பின் வெற்றிக்கு வாழ்த்துக் கூறியுள்ள ர~;ய ஜனாதிபதி வால்டிமிர் புட்டின், தம்மால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் அவருக்கு வழங்கக் காத்திருப்பதாக அறிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் ரஸ்ய ஜனாதிபதி வால்டிமிர் புட்டினின் கைப்பொம்மையென்று தேர்தல் காலத்தில் ஹிலாரி கிளின்ரன் கூறி வந்தது உண்மைபோல இப்போது தோற்றம் கொடுக்கிறது.
இது ஒருபுறமிருக்க இலங்கையின் சிங்களத் தலைவர்கள் இத்தேர்தல் முடிவுபற்றி கூறும் கருத்துகளும் கவனத்துக்குரியவை.
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் அமெரிக்காவில் பதவிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னைய குடியரசுக் கட்சி நிர்வாகம் வழங்கிய ராஜதந்திர மற்றும் புலனாய்வுத்துறை ஒத்துழைப்புகளே விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவியதாக டரம்புக்கு மகிந்த நினைவூட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகைக்கான ட்ரம்பின் பாதை குறிப்பிடத்தக்கது என்று பாராட்டியுள்ள ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும் அவரது குழுவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேற்சொன்ன மூவரின் கருத்துகளும் ஒரு விடயத்தை மட்டும் தொடவில்லை. ட்ரம்பின் கடந்தகாலச் சாதனைகள், அரசியல் அனுபவங்கள், ராஜதந்திர செயற்பாடுகளென்று குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமேயில்லாததால் அதுபற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை.
இதனை எழுதும்வரை எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடமிருந்து ட்ரம்புக்கு எந்த வாழ்த்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தமக்கேயுரிய இனரீதியான கருத்தை வெளியிட்;டுள்ளார்.
அமெரிக்காவின் பெரும்பான்மையின மக்கள் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதை ஒரு பாடமாக பெரும்பான்மையின சிங்கள் மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது கோதபாயவின் கருத்து.
அவர் இங்கு சொல்வது என்னவெனில், இலங்கையிலுள்ள சிங்கள மக்கள் சிறுபான்மை மக்களை ஓரந்தள்ளிவிட்டு, பெரும்பான்மையினரின் ஒருமித்த ஆட்சியை உருவாக்க வேண்டுமென்பதே.
ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில், இவரும் இவரது சகோதரர் மகிந்தவும் இலங்கையில் சிறுபான்மையினத்தவர் என்று எவருமேயில்லை என்று கூறியதை இப்போது நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
கடந்தாண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சிறுபான்மை இனத்தவரே தம்மைத் தோற்கடித்தனர் என்று மகிந்த கக்கிய இனவாதத்தையும் மறந்துவிட முடியாது.
அதேசமயம், பெரும்பான்மையினத்தவரான சிங்களவர் தமக்கே கூடுதலான வாக்களித்ததாகவும், தமிழர் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளாலேயே மைத்திரி வெற்றி பெற்றதாகவும் மகிந்த கூறியதும் நினைவுக்குரியது.
சிறுபான்மையினத்தவர் என்று சொல்லப்படுபவர்களின் வாக்குகள் எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததென்பதை கடந்த வருடத் தேர்தல்களில் தெரிந்து கொண்ட போதிலும் அதனை ஒரு பாடமாகக் கற்று கொள்ள ராஜபக்ச குடும்பம் தயாராகவில்லை.
ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையினால் விடுக்கப்படும் அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கு சாதகமான காரணியாக டொனால்ட் ட்ரம்பின் வெற்றி அமையும் என்ற நம்பிக்கையையும் கோதபாய இங்கு வெளியிட்டுள்ளார்.
ஒபாமாவின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அதன் அதிகார மையமாக விளங்கிய ராஜாங்கச் செயலாளர் பதவியை வகித்தவர் ஹிலாரி கிளின்ரன்.
அப்போது, உலகிலுள்ள பயங்கரவாத அமைப்புகளோடு விடுதலைப் புலிகளை சமப்படுத்திப் பார்க்க முடியாது என்ற கருத்தை ஹிலாரி வெளியிட்டிருந்தார்.
இக்கருத்து ராஜபக்ச சகோதரர்களை எவ்வளவு தூரம் கடுப்பாக்கியது என்பதை இப்போது கோதபாயவின் அறிக்கையூடாகப் பார்க்க முடிகிறது. மைத்திரியும் ரணிலும்கூட ராஜபக்சக்களின் இனவாத மனப்பாங்குக்கு வேறுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள்
அதேபோன்று தமிழர்கள் மத்தியிலும் நாம் ஒன்றுபட்டு ஒரேகுரலில் இணைந்து செயற்பட வேண்டுமென்ற எண்ணம் ஏற்படாதவரை, மேலாண்மை ஆதிக்கம் பெரும்பான்மை எனப்படுபவர்களிடம் இருந்தே தீரும்.
– பனங்காட்டான்-