ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஆஸ்திரேலியா கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசிபிக் பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து, வணூட்டு, புதிய கலிடோனியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பூகம்பத்தால் அபாயகரமான சுனாமி அலைகள் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் உருவாக வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைவாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது.

7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து கடலோரப் பகுதிகள் கரையில் வலுவான மற்றும் அசாதாரண நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத எழுச்சிகளை காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.