வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி பஞ்சாயத்து களத்துக்காட்டு தோட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வானில் இருந்து ஒரு மர்ம பொருள் விழுந்தது. பலத்த சத்தத்துடன் விழுந்த அந்த மர்ம பொருள் பொதுமக்களிடையே பெரும் பீதியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், அந்த பொருள் எதில் இருந்து விழுந்தது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், அது வெடிபொருள் இல்லை என்பதை உடனடியாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனால் விமானத்தில் இருந்து அந்த பொருள் விழுந்திருக்கலாம் என் கோணத்தில் அதிகாரிகள் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து விமான பாதுகாப்புத்துறை மற்றும் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்புகொண்டது. மர்ம பொருளின் புகைப்படமும் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. அதை ஆய்வு செய்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பொருள் விமானத்தின் பாகம் இல்லை என அறிக்கை அளித்து உள்ளனர்.

இதனால் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் விண்வெளியில் இருந்து விழுந்ததா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. ஆனால், இதுவரை அந்த பொருள் என்னவென்று உறுதி செய்யப்படவில்லை. எனவே, தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அந்த பொருள் என்னவென்பதை அறிவதற்கான ஆர்வமும் பொதுமக்களிடம் தொடர்கிறது.

தற்போது, அந்த பொருள் ஒட்டன்சத்திரம் தாசில்தாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இது பற்றி பல துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

இந்த மர்ம பொருள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலைப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் வெங்கட்ராம், பொங்கியணன், ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து அந்த பொருளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் இறுதியில் அவர்கள் கூறியதாவது:-

இந்த பொருளானது, வானில் ராக்கெட்டில் எரிபொருள் நிரப்ப பயன்படும் ஒரு பாகமாகும். ஆனால், இந்திய விஞ்ஞானிகள் வட்டவடிவமான பொருளை மட்டுமே பயன்படுத்துவார்கள்.

இந்த பொருள் உருளை வடிவத்தில் இருப்பதால் இது வெளிநாட்டு ராக்கெட்டில் பயன்படுத்துவதாக இருக்கலாம்.மேலும், ராக்கெட்டின் பாகங்கள் வளிமண்டத்தில் நுழையும்போது அங்கேயே எரிந்து சாம்பலாகி விடும்.

ஆனால் வளிமண்டலத்தை தாண்டி புவி ஈர்ப்பு விசை பகுதிக்குள் நுழைந்தால் மட்டுமே பூமியில் விழும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தான் இந்த பொருளும் விழுந்திருக்க கூடும், மேலும், இந்த பொருளின் மீதான ஆய்வு முடிந்த பிறகு இது எந்த நாட்டு ராக்கெட்டில் பயன்படுத்தப்படுவது என்ற தகவல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.