நியூசிலாந்தின் வடக்கே கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சுனாமி அலை உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிஜி, நியூசிலாந்து மற்றும் வனுவாட்டுவின் சில கடலோர பகுதிகளில் கடல் அலைகள் 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை எழுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் இந்தோனேசியாவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ரா தீவின் கடலோர பகுதியில், 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 அலகாக பதிவாகியிருந்தது. எனினும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்த பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.