எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என சட்டத்தரணிகள் அரசியல்வாதிகள் அடங்கிய குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, ராஜித சேனாரட்ண உட்பட பலரின் சிவில் உரிமையை அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தி பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மியன்மார் பாணியிலான இராணுவ ஆட்சிக்கு முயல்கின்றார் என செய்தியாளர் மாநாட்டில் சட்டத்தரணி சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சி ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டபோதிலும் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள் என சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் குறித்த குழு நாட்டின் சட்டங்களுக்கு அப்பால் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சிநிரலிற்காக இந்த ஆணைக்குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு நாட்டின் நீதித்துறையின் அடிப்படைக்கே அச்சுறுத்தலாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டங்களை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. ஜனநாயக வழியிலான ஆட்சி முறையைப் பின்பற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal