ஆரம்பமானது அவுஸ்திரேலிய ஓபன்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு சிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய பகிரங்க (ஓபன்) டென்னிஸ் தொடரானது இன்று மெல்போர்னில் ஆரம்பமாகியுள்ளது.

இதன் தொடக்க ஆட்டத்தில் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பான் வீராங்கனையான நவோமி ஒசாகா வென்றுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெல்போர்னில் பட்டத்தை வென்ற ஒசாகா, ரோட் லாவர் அரங்கில் நடந்த போட்டியின் முதல் போட்டியில் விளையாடி, அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மெல்போர்னில் நடந்த காலிறுதிக்கு முன்னேறிய தரவரிசையில் 39 ஆவது இடத்தில் உள்ள ரஷ்ய வீராங்கனை பவ்லியுசென்கோவாவுடன் சுமார் ஒரு மணிநேரமும் 8 நிமிடம் வரை ஒசாக்க எதிர்த்தாடினா.

இதேவேளை பெண்களுக்கான மற்றோர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார். செரீனா வில்லியம்ஸ் 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்திற்கான தனது சமீபத்திய முயற்சியை லாரா சீகமண்டிற்கு எதிராக 6-1, 6-1 என்ற கணக்கில் வென்றார்

ஆண்டுதோறும் 4 வகையிலான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வழக்கமாக ஜனவரி மாதத்தில் நடைபெறும்

எனினும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 3 வாரங்கள் தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கி எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இந்த ஓபன் போட்டிகளுக்கு அன்றாடம் 25,000 முதல் 30,000 வரை பார்வையாளர்களை அனுமதிக்கு போட்டி ஏற்பாட்டாளர்களின் திட்டங்களுக்கு விக்டோரிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி தொடரின் முதல் எட்டு நாட்களுக்கு அன்றாடம் 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும், காலிறுதி ஆரம்பமானதன் பின்னர் அந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைக்கப்படும்.