அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் கோரிச்சென்று அவுஸ்ரேலியா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டு, நவ்று மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிவந்த நிலையில் நவ்று மற்றும் மனுஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1800 பேர் இவ்வாறு அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம் என அச்செய்தி தெரிவிக்கின்றது.
இந்த விடயம் தொடர்பாக நீண்டநாட்களாக அமெரிக்கா – அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், ரொனால்ட் ரம்ப் அதிபராகப் பதவி ஏற்பதற்கு முன்பு இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தரப்பு அமைச்சர்கள் இச்செய்தியை உறுதிப்படுத்த மறுத்துள்ளதுடன் புகலிடக்கோரிக்கையாளர்களை மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்துவது குடிவரவு அமைச்சர் பீற்றர் டற்றனுடன் சம்பந்தப்பட்டது எனக் கூறியுள்ளனர்.
அதேநேரம் இச்செய்தியை வரவேற்றுள்ள லேபர் கட்சி முக்கியஸ்தர் அன்ரனி அபாநேஸ் உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டுள்ளவர்கள் அமெரிக்கா போன்ற நாட்டில் குடியமர்த்தப்படுவது நல்லதொரு விடயம் எனக் கூறினார்.