நவால்னி: ரஷ்யாவின் புதிய லெனினா?

கடந்த 2020-ல் ரஷ்யாவில் கணிசமான அளவில் மாற்றங்கள் ஏற்பட்டன: கரோனா பெருந்தொற்று, அதன் விளைவான பொருளாதாரச் சரிவு, ஒரு பிராந்திய ஆளுநரின் கைது, பெலாரஸ், கிர்கிஸ்தான், மால்டோவா, நகோர்னோ-காரபாக் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள். ஆனால், 2021-ம் ஆண்டானது கடந்த ஆண்டின் பிரச்சினைக்குரிய சம்பவம் ஒன்றை கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது: புதினுக்கு எதிரான செயல்பாட்டாளர் அலெக்ஸி நவால்னியின் இன்னல்கள், இதனால் பல கேள்விகளுக்குப் பதிலே கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஐரோப்பாவின் தடைகள்

மாஸ்கோவுக்குச் செல்லும் விமானத்தில் நவால்னிக்கு உடல்நலம் மோசமடைந்ததிலிருந்து இந்த நெடிய கதை தொடங்குகிறது. ஆம்ஸ்க் நகரில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு அங்கே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் அவர் ஜெர்மனிக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அளிக்கப்பட்ட சிகிச்சையில் நம்பவே முடியாத வகையில் அவர் மீண்டுவந்தார். கிட்டத்தட்ட உயிரைப் பறித்திருக்கக் கூடிய நஞ்சிலிருந்து அவர் உடல்நலம் தேறினார்.

இதற்கிடையே, நவால்னிக்கு ரஷ்யப் பாதுகாப்புச் சேவை அமைப்பு நஞ்சூட்டியிருப்பதற்குத் தங்களிடம் போதுமான அளவுக்கு ஆதாரம் இருப்பதாக ஜெர்மனி அரசு கருதியது. நோவிசோக் என்ற நஞ்சை அவருக்குச் செலுத்தியிருக்கிறார்கள் என்று ஜெர்மனி கூறியது. இதனால் ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புச் சேவை அமைப்பான ஒன்றிய பாதுகாப்புச் சேவையின் தலைவர் உள்ளிட்ட 6 பேருக்கும், ரஷ்யாவிலுள்ள வேதிப்பொருள் ஆராய்ச்சி நிலையத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுக்கிறது. ஆனால், நஞ்சூட்டப்பட்டது குறித்த பல கேள்விகளுக்கு ரஷ்யா இன்னும் பதிலளிக்க வேண்டியிருக்கிறது.

இதன் தொடர்ச்சிதான் பெர்லினிலிருந்து ஜனவரி 17, 2021-ல் நாடு திரும்பிய நவால்னியைத் தடுப்புக் காவலில் வைத்ததும், அதைத் தொடர்ந்து ஜனவரி 23 சனிக்கிழமையன்று நாடு முழுக்க மக்கள் போராட்டங்களை நடத்தியதும். தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட பழைய வழக்கொன்று தொடர்பாகவும் பொதுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது குறித்து புதிய வழக்கின் தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

அவரை விடுவிக்கக் கோரிப் போராட்டங்கள் நாடு முழுவதும், ஒவ்வொரு பெருநகரத்திலும், பசிபிக் கடற்கரை தொடங்கி பால்டிக் கடல் வரை நடைபெற்றுவருகின்றன; இதன் விளைவாக 3 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர். பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் தனித்துத் தெரிவது என்னவென்றால் வெவ்வேறு வாழ்க்கை நிலைகளையும் வெவ்வேறு வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டதுதான். வழக்கமாக, நவால்னி தொடர்பான போராட்டங்களால் இளைஞர்களே (15-25 வயது) ஈர்க்கப்படுகின்றனர். மற்றவர்களும் இந்த முறை போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது. உக்ரைன் தொடர்பான தடைகள், குறைந்துபோன எரிபொருள் விலை போன்றவற்றின் காரணமாக வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட சரிவால் மக்கள் அவநம்பிக்கையில் ஆழ்ந்ததன் பிரதிபலிப்பாக இது இருக்கலாம், கூடவே பெருந்தொற்று காரணமாக சீர்குலைந்த பொருளாதாரம் வேறு. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ‘சாமர்த்தியமான வாக்களிப்பு’க்கு, அதாவது ஆளும் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து எதிர்க் கட்சியினரின் எல்லா வாக்குகளும் ஒரே நபருக்குச் செல்ல வேண்டும் என்ற நவால்னியின் அறைகூவல் அரசுத் தரப்பினரை உறங்க விடாமல் செய்திருக்கலாம்.

நஞ்சு செலுத்தப்படுவதற்கு முன்பு நவால்னி பரவலாக அறியப்படாத ஒரு அரசியலராகவே, மாஸ்கோவைச் சார்ந்து செயல்படுபவராகவே இருந்தார். தாராளர்களின் எதிர்க் கட்சியான யாப்லோகோ என்ற கட்சியில் 2000-களில் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இறுதியில் அங்கிருந்து பிரிந்து தனக்கென்று ஒரு தேசியக் குழுவை அமைத்துக்கொண்டார். 2000-களின் பிற்பகுதியில் ஊழலுக்கு எதிராகப் பிரச்சாரங்களைத் தொடங்கினார். ரோஸ்னெஃப்ட், கேஸ்ப்ரோம் போன்ற பெரிய நிறுவனங்களின் பங்குதாரராக இருந்த அவர் அந்த நிறுவனங்கள் தங்களின் நிதி விவகாரங்களில் மிகவும் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த முயன்றார். இதைத் தொடர்ந்து ரஷ்ய உயர் அதிகாரத் தரப்பினர் பலரின் முறைகேடுகளையும் ஊடகங்களில் அம்பலப்படுத்தினார். இவர்களில் முதன்மையானவர்கள் அரசு அதிகாரிகளும் பெருந்தொழிலதிபர்களும்தான். இவர்கள் அனைவருமே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். மேற்கொண்டு அவர் நடத்திய புலனாய்வுகள் ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் பிரதமருமான ட்மிட்ரீ மத்வ்யத்ஃப் நோக்கி குறிவைத்திருக்கின்றன. சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும் இவரது புலனாய்வுகள் விட்டுவைக்கவில்லை. அரசாங்கப் பணத்தைக் கொண்டு அவர் தனக்கென்று தெற்கு ரஷ்யாவில் கட்டிக்கொண்டதாகக் கூறப்படும் ஆடம்பர மாளிகையைப் பற்றிய தகவல் புதிதில்லை, புதின் அதை ஏற்கெனவே மறுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் நவால்னி ஒருசில வீதிப் போராட்டங்கள் மாஸ்கோவின் மேயர் தேர்தலுக்கான பிரச்சாரம் தவிர பெரும்பாலும் இணையம் வழியாகவே செயல்பட்டார். மேல்மட்டத்தினரிடையே உள்ள உள்பூசல்களுக்கு ஒரு கருவியாக நவால்னி பயன்படுத்தப்படுகின்றார் என்று சில அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது நம்புவதற்குக் கடினமான ஒன்றல்ல, ஏனென்றால், ஊழலுக்கு எதிரான தனது பிரச்சாரங்களில் நவால்னி பயன்படுத்தும் தகவல்களில் சில பொதுவெளியில் எளிதில் கிடைப்பவையல்ல, சொல்லப்போனால் பொதுவெளியில் கிடைப்பதற்கு சாத்தியமே அற்றவை. இது போன்ற தகவல்கள் அரசின் உள்ளிருந்து மட்டுமல்ல அதன் மிகவும் உயர்தரப்பிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

வேறுபட்ட கருத்துகள்

அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக அரசியல் நோக்கர்களிடமிருந்து வேறுபட்ட எதிர்வினைகள் வந்திருக்கின்றன. ஆட்சி மாற்றத்தை நோக்கி எடுத்துவைக்கப்பட்ட மிகவும் முனைப்பான காலடிகள் என்று சிலர் கருதுகிறார்கள், வேறு சிலரோ இவற்றை ஒன்றுமில்லாத விஷயத்துக்காக எழுப்பப்படும் பெரும் கூச்சல் என்று கருதுகிறார்கள். நவால்னி ஜெர்மனியிலிருந்து திரும்பியதை 1917-ல் போல்ஷ்விக் தலைவர் லெனின் ரயிலில் பயணம் செய்ததும், அந்த ஆண்டின் அக்டோபர் புரட்சிக்கு வித்திட்டதுமான நிகழ்வுடன் ஒப்பிட்டு, எப்போதும் அரசுக்கு மிகவும் ஆதரவாக நடந்துகொள்ளும் தொலைக்காட்சித் தொகுப்பாளரான ட்மிட்ரி கீஸெல்யோஃப் பேசியது வியப்பளிக்கக் கூடியது.

கீஸெல்யோஃப் எந்த அடிப்படையில் குறிப்பிட்டிருந்தாலும், அவரது விடுதலைக்காகப் போராட்டங்கள் நீடித்தாலும் கூட நவால்னி நிச்சயமாக லெனின் அல்ல. ரஷ்ய அரசியலில் நவால்னி மிக முக்கியமான பங்கை ஆற்றுவார் என்பதும் மேற்கத்திய ஊடகங்களின் கண்மணியாக உருவாவார் என்பதும் தற்போது தெளிவாகத் தெரிகிறது (எனினும் மாஸ்கோவில் இருக்கும் மேற்கத்திய ஊடகங்களின் செய்தித்தொடர்பாளர்கள் நவால்னி பற்றியும் அவரது எதிர்காலத்தில் அவர் ஆற்றவிருக்கும் பங்கைப் பற்றியும் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் அவ்வளவு உற்சாகமானவை அல்ல, அவரை எச்சரிக்கையாகவே அணுகுகிறார்கள்.)

நவால்னி குறித்துத் தற்போது நிலவும் பரவச நிலையைத் தாண்டி ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடும் வினையூக்கியாக அவர் இருப்பதற்கு வாய்ப்பில்லை. தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது அரசியல் களமானது ரஷ்ய சமூகத்தின் அனைத்துத் தரப்புகளையும் தற்போது ஈர்க்கும் விதத்தில் இல்லை அல்லது தன்னைச் சுற்றிலும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரள வைக்கும் விதத்திலும் இல்லை. புதினுக்கோ மற்ற பல தலைவர்களுக்கோ ஈடாக அவர் இல்லை, என்றாலும் அரசின் கொள்கைகள் குறித்து மக்கள் அடைந்திருக்கும் வெறுப்பை வெளிப்படுத்த உதவுபவராக அவர் தற்போதைக்கு இருக்கிறார்.

ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் நிகழ்வது குறித்து இந்தியா ஆவலாக இல்லாமல் இருக்கலாம் என்கிற அதே நேரத்தில் நவால்னி மூலமாக நடக்கும் திசைதிருப்பலை ரஷ்ய உயர்தரப்பினருக்குள் நடக்கும் அதிகார மோதலாக அடையாளம் கண்டுகொள்வது முக்கியம். ரஷ்யாவில், ஒரே ஒரு விதிவிலக்கைத் தவிர, மாற்றம் என்பது வழக்கமாக அதிகாரத்தின் உயர்தரப்பில் இருப்பவர்களிடமிருந்துதான் தொடங்கும்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை