பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 129 பேரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட கிம்புலா எல குணா, அவரது மகன் பும்பா மற்றும் பிறிதொரு நபர் ஆகியோர் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவர் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இன்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல்களை வெளியிட முடியும் என்றும் இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறிய 129பேரைக் கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 87 பேருக்கு இன்டர்போல் நீல அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகவும் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
40 பேர் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்காகவும் 24 பேர் ஏனைய குற்றங்களுக்காகவும் தேடப்படுவதாகவும் இவ்வாறான குற்றவாளிகளைக் கொண்டுவர இன்டர்போலின் உதவி நாடப்படும் என்றும் அவர் கூறினார்.