ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை ‌ ‘பிங்’ மூலம் நிரப்ப முடியும் – பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘பிங்’ தேடுபொறி நிரப்பும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணையதளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

கூகுள்

கடந்த மாதம் இது தொடர்பான செனட் விசாரணைக்கு ஆஜரான கூகுளின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரிவின் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா, புதிய சட்டம் அமலுக்கு வந்தால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவையை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறினார். இது ஆஸ்திரேலிய அரசுக்கு கூகுள் நிறுவனம் விடுத்த பகிரங்க மிரட்டலாகவே பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறியின் சேவை நிறுத்தப்பட்டால் அந்த வெற்றிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘பிங்’ தேடுபொறி நிரப்பும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘மைக்ரோசாப்ட் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே கூகுள் தேடுபொறியின் வெற்றிடத்தால் ஆஸ்திரேலியர்கள் மோசமாக உணர மாட்டார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும். ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானது என்னவென்றால் எங்கள் மக்களுக்கு சரியான விதிகளை நாங்கள் அமைக்கிறோம். இந்த நாட்டில் ஒரு செய்தி சூழலை கொண்டிருப்பது நிலையானது மற்றும் வணிக ரீதியாக ஆதரிக்கப்படுகிறது. மேலும் இது ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இன்றியமையாதது’’ என்றார்.

ஆஸ்திரேலியாவில் கூகுளுக்கு அடுத்த இடத்தில் மிகவும் பிரபலமான தேடு பொறியாக ‘பிங்’ தேடுபொறி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.