பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்டம் சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து, அவற்றை கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா என்பது தொடர்பில் காவல் துறை சோதனை செய்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கோட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது.
போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வீதித் தடை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வீதித்தடையை கடப்பவர்கள் வழி மறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.