அஜித்குமாரின் ஏகே57

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித்குமாரும், இயக்குநர் சிவாவும் மீண்டும் இணைந்துள்ள படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அந்தப் படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை என்பதாலும், அது அஜித்தின் 57-வது படம் என்பதாலும் ஏகே57 என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.

இந்தப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக கமலின் இளையமகளான அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார்.

ஏகே57 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடந்தது. இதனை தொடர்ந்து படத்தின் மூன்றாம் கட்டபடப்பிடிப்பு விரைவில் பல்கேரியா நாட்டில் தொடர்ந்து 50 நாட்கள் நடக்கவிருக்கிறது.

இதுதான் ஏகே57 படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு என்று சொல்லப்படுகிறது. கதை வெளிநாட்டில் நடப்பதால் பெரும்பாலான நாட்கள் வெளிநாடுகளிலேயே படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

பல்கேரியாவில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் வில்லனாக நடிக்கும் விவேக் ஓபராய் ஆகியோர் அடங்கிய படக்குழுவினர் இன்னும் சில தினங்களில் பல்கேரியா செல்லவிருக்கின்றனர். பல்கேரியா நாட்டு ஷெட்யூல் முடிந்த பிறகு சென்னையில் சில தினங்கள் மட்டும் இப்படத்தின் பேட்ச்வொர்க் படப்பிடிப்பு நடைபெறுமாம்.