இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்து காணாமல்போனவர்களின் உறவினர்களின் சங்கத்தினர் கனடா வெளிவிவகார அமைச்சர் மார்க்கானோவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான முகன்மை குழுவில் கனடாவும இடம்பெற்றிருப்பதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துவதை உங்கள் தீர்மானத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களாகிய நாங்கள் இந்த கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் சிறுவர்கள் உட்பட எங்கள் காணாமல்போனவர்களிற்கு நீதி கிடைப்பது குறித்த நம்பிக்கையை இழந்த பின்னர் நாங்கள் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம் எனவும் அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போனவர்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் செயற்குழு உலகில் அதிகளவானவர்கள் காணாமல்போன நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என தெரிவித்திருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் எனவும் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.