ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட அகதிகளில் சுமார் 50 பேரை ஓராண்டு தடுப்புக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு விடுவித்திருக்கிறது.
இவர்கள் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த அகதிகளாவர். ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட இந்த அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டல்களிலும் குடிவரவுத் தடுப்பிலும் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது விடுவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தற்காலிக இணைப்பு விசா வழங்கப்பட்டிருக்கிறது.
சுமார் 8 ஆண்டுகள் குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் அகதியான ரம்சி சபாநாயகன், “என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையில் எனது மகிழ்ச்சியை விவரிக்க முடியவில்லை,” எனக் கூறியிருக்கிறார்.
கடந்த ஜூலை 2013ம் ஆண்டு படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த சபாநாயகன் கிறிஸ்துமஸ் தீவினை வந்தடைந்திருக்கிறார். பின்னர் பப்பு நியூ கினியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சுமார் 6 ஆண்டுகளைக் கழித்திருக்கிறார்.
பின்னர், மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் மனநலச் சிக்கல் மற்றும் கடும் தலைவலி சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு கடந்த நவம்பர் 2019ம் ஆண்டு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை ஒருபோதும் குடியமர்த்த மாட்டோம் என எச்சரித்து வருகிறது.