நினைவேந்தல் (Memorialisation) என்பது, பலவிதமான செயல்முறைகள் ஊடான கூட்டு நினைவூட்டலின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கிறது. இது நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுகளை முன்னிறுத்தும் முக்கிய இடங்கள், கடந்த காலத்தை எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான தளங்களைக் குறிக்கிறது.
உலகெங்கிலும் வன்கொடுமை, சித்திரவதை, இனப்படுகொலை ஆகிய சம்பவங்களும் அவை நடந்தேறிய இடங்களும் மனிதப் புதைகுழித் தளங்களும் பிற ஒத்த இடங்களும், பொது நினைவுச் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன.
20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலங்களுள் ஒன்றான ‘ஹோலகோஸ்ட்’ நடந்தேறிய நாஸிக்களின் அன்றைய சித்திரவதை முகாம்கள், இன்று நினைவேந்தல் ஸ்தலங்களாக மாறியுள்ளன. உலகெங்கும் ‘ஹோலகோஸ்ட்’ அருங்காட்சியகங்களும் நினைவுச்சின்னங்களும் எழுப்பப்பட்டு, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலம், உலகின் பல நாடுகளிலும் நினைவுகூரப்படுகிறது.
இத்தகைய நினைவேந்தல் என்பது, நினைவஞ்சலி செலுத்துதல் (remembrance) என்பதிலிருந்து வேறுபட்டது. நினைவஞ்சலி செலுத்துதல் என்பது, தனிப்பட்டதொரு விடயம். தனிநபர் ஒருவரோ, ஒரு குடும்பமோ உயிரிழந்த உறவை நினைந்து, அஞ்சலி செலுத்தும் தனிப்பட்டதொரு நிகழ்வு ஆகும்.
நினைவேந்தல் என்பது, மேற்கூறியது போன்று பகிரங்கமானதொரு பொதுச் செயற்பாடு. இது, மிகப்பழங்காலத்தில் இருந்து, மனிதக் கூட்டத்தினிடையே காணப்பட்டதொன்றாகும். இவை வெறுமனே, நீத்தார் நினைவு மட்டுமல்ல; அவை நடந்தேறிய நிகழ்வுகளின் வரலாற்றுச் சாட்சிகளாகின்றன. அது அந்த மனிதக் கூட்டத்துக்கும் முழு மனித இனத்துக்கும் அதன் கடந்தகால நிகழ்வுகளூடான வரலாற்றை ஞாபகப்படுத்துவதாக அமைவதோடு மட்டுமல்லாமல், அதன்பாலான படிப்பினைகளைப் பற்றியும் சிந்திக்கச் செய்வதாக அமைகிறது. இதுவே நினைவேந்தலின் முக்கியத்துவம்.
ஆனால், மனித வரலாற்றில் நினைவேந்தல் அனைவருக்குமானதொன்றாக இருக்கவில்லை. வரலாற்றில் மிக நீண்டகாலமாக, அவை உயர்குழாவுக்கு உரியதொன்றாகவே பெரும்பாலும் இருந்தது. நினைவுச்சின்னங்கள், நினைவு ஸ்தூபிகள், மணிமண்டபங்கள், நினைவாலயங்கள் என்று உயர்குழாமுக்கு உரியவர்களின் நினைவுகளே வரலாற்றில் அதிகம் பதிவுசெய்யப்பட்டன.
யுத்தம் என்பது, மனித வரலாற்றோடு ஒன்றியதொன்று. மனிதன் கூட்டமாக வாழத்தொடங்கிய காலம் முதல், யுத்தம் என்பது ஏதோ ஒரு வகையில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருந்தது. நினைவேந்தல் என்பதில், யுத்தத்தின் பங்கு முக்கியமாக அமைகிறது.
யுத்தம் என்பது, ஒரு பெரும் படையின் முயற்சி. ஆனால், வரலாற்றில் யுத்த நினைவுகளாக அரசன், தளபதி போன்றவர்களின் நினைவுச்சின்னங்களே, அந்த யுத்தத்தின் நினைவேந்தலாக மாறியிருந்தன. நவீன ஜனநாயகத்தின் வருகையோடு, இந்த நிலை பரிணாமமடைந்தது. இன்று உலக நாடுகளில், யுத்த நினைவேந்தல் சின்னங்களில், உயிர்நீத்த ஒவ்வொரு சிப்பாயின் பெயரும் பதியப்பட்டு வருகிறது.
தமிழர் வரலாற்றில், சங்ககாலத்தில் யுத்த நினைவேந்தல் என்பது நடுகல் என்ற வடிவிலமைந்து இருந்தமையைத் தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு நூல்களில் காணலாம். இவை பொதுவாக, அனைத்து வீரர்களுக்கும் உரியதாக இருந்தது. மாய்ந்த வீரனின் பெயரும் சிறப்பும் நடுகல்லில் பொறிக்கப்பட்டதோடு, அவனது படைக்கலங்களை, நடுகல்லுக்கு அருகிலேயே ஊன்றியிருந்தனர்.
இன்று, உலகின் பல நாடுகளில் பல யுத்த நினைவேந்தல் ஸ்தலங்கள் உருவாக்கப்பட்டு, பேணப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு யுத்த வெற்றியைக் கொண்டாடுதல், வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களை நினைவில் கொள்ளுதல், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களைப் பெருமைப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்கள் ஒரு புறமிருந்தாலும், சில நினைவேந்தல் ஸ்தலங்கள், யுத்தத்தின் பேரழிவை எடுத்துரைப்பனவாகவும், இனிமேல் இதுபோன்றதொன்று நடக்கக்கூடாது என்ற செய்தியைச் சொல்வனவாகவும் அமைகின்றன.
இவை, ஒவ்வொரு நாட்டின் அரசியல் தெரிவுகள் சார்ந்து கட்டமைக்கப்படுகின்றன. எது எவ்வாறாயினும், நினைவேந்தல் என்பது மனித வாழ்வினதும் மனித நாகரிகத்தினதும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.
நிலைமாறுகால நீதி என்பதன் கீழ், நினைவேந்தலுக்கு ஒரு முக்கிய பங்கு உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தின் கொடுமையான மனித உரிமை, மனிதாபிமான மீறல்களைக் கையாள்வதில், இத்தகைய கொடுமையான கடந்த காலத்திலிருந்து, அமைதியை நோக்கிய எதிர்காலத்துக்கு மாற்றமடையும் அரசுகளுக்குப் பெரும்பாலும் நிலைமாறுகால நீதி தேவைப்படுகிறது.
ஆனால், நிலைமாறுகால நீதியை சுவீகரிக்கும் அரசுகள் கூட, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுடைய கண்ணியத்தை மீட்டெடுப்பதைப் புறக்கணித்து விடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமும் கௌரவமும் மீட்டெடுக்கப்படாதவரை, அவர்களது உணர்வுகள் மதிக்கப்படாதவரை நிலைமாறுகால நீதி என்பது அர்த்தமற்றதாகிவிடும்.
கொடூரங்கள், தீவிர மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரங்களினதும் இழப்பீட்டு உரிமையினதும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் ஒரு பகுதியாக நினைவேந்தல் அங்கிகரிக்கப்படுகிறது.
21 மார்ச் 2006இல் நிறைவேறிய ஐ.நா சபையின் பொதுச் சபை தீர்மானமானது, சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் கொடூர மற்றும் தீவிர மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் மற்றும் இழப்பீட்டு உரிமை தொடர்பிலான அடிப்படைக் கொள்கைகள், வழிகாட்டுதல்களை எடுத்துரைக்கிறது.
அதில் பாதிக்கப்பட்டவர்களைத் திருப்தி செய்வதன் ஓர் அங்கமாக பாதிக்கப்பட்டவர்களை நினைவுகொள்ளுதல், அஞ்சலிசெய்தல் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. நிலைமாறுகால நீதியினூடாக கடந்தகால அநீதிகளுக்கான நியாயத்தையும் ஏற்பட்ட காயங்களுக்கான மருந்தையும் எதிர்கால மீளிணக்கப்பாட்டையும், நீடித்து நிலைக்கத்தக்க சமாதானத்தையும் ஏற்படுத்த விளைகின்றவர்கள், பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்குமான பரிகாரம் இழப்பீட்டு உரிமைகளை வழங்குவார்கள். அப்படிச் செய்வதைத் தவிர்க்கிறவர்களின் அரசியல் நோக்கம் என்பது நீதி, நியாயம், மீளிணக்கம், சமாதானம் சார்ந்ததாக இருக்க முடியாது என்பது திண்ணம்.
பாதிக்கப்பட்டவர்களின் கடந்தகால நினைவுகளைப் பாதுகாப்பதானது காயங்களை ஆற்றும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக கருதப்படுகிறது. அந்தவகையில் நினைவேந்தல் என்பது கடந்தகால நினைவுகளைப் பாதுகாப்பதில் அடையாள முக்கியத்துவம் மிக்கதொன்றாகவும், அதனூடாக எதிர்காலத்தில் இதுபோன்ற பெருங்கொடுமைகள் இடம்பெறாது தடுக்கும் ஊக்கத்தை வழங்குவதாகவும் அமைவதோடு மட்டுமல்லாது, பெரும்கொடுமைக்கு அவலத்துக்கும் ஆளாக்கப்பட்டவர்கள், படுகொலைசெய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் ஆகியோரை கௌரவப்படுத்தும் சின்னமாகவும் அமைகிறது.
மேலும், அண்மைக்காலங்களில் நினைவேந்தலை ஒரு மனித உரிமையாகக் காணும் தன்மை உருவாகியுள்ளதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, நினைவேந்தலை மனிதனின் கலாசார உரிமையின் ஓர் அங்கமாக சர்வதேச மனித உரிமைகள் பரப்பில் அங்கிகாரம் பெறத்தொடங்கியுள்ளது.
சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR) இன் 15ஆவது சரத்தின் கீழான கலாசார உரிமையின் ஓர் அங்கமாக, நினைவேந்தல் பொருள்கோடல் செய்யப்படுகிறது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதன், கலாசார உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் பரீடா ஷஹீட் சமர்ப்பித்திருந்த அறிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த அறிக்கையை, மனித உரிமைகள் பேரவை தனது தீர்மானத்தில் குறிப்பெடுத்துக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. விசேட அறிக்கையாளர் பரீடா ஷஹீட், தன்னுடைய அறிக்கையில், ‘கடந்த காலத்தை நினைவுகூர முற்படும் வெகுஜன அல்லது கடுமையான மனித உரிமை மீறல்கள், மிகக்கொடுமையான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும், அரசுகளும் பிற பங்குதாரர்களும் ஆதரவளிக்குமாறு விசேட அறிக்கையாளர் பரிந்துரைக்கிறார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பல்வகைப்பட்ட அனுபவங்களை கலாசார ரீதியாக அர்த்தமுள்ள வழிகளில் வெளிப்படுத்த தேவையான இடத்தை வழங்கும் செயல்முறைகளாக நினைவூட்டல் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இத்தகைய செயல்முறைகள் பலவிதமான ஈடுபாடுகளை உள்ளடக்கியது. அவை பௌதீக நினைவுச்சின்னங்களை நிறுவுவதன் மூலம் மட்டும் ஒத்திசைக்கப்பட வேண்டிய அவசியமில்லை, அதனைத்தாண்டி ஏராளமான செய ற்பாடுகள், கலாசார வெளிப்பாடுகளின் வடிவத்தையும் கூட அவை கொண்டமையலாம்’ என்று குறிப்பிடுகிறார்.
நினைவேந்தல் தொடர்பிலான இத்தகை மனித உரிமை சார்ந்த முற்போக்குப் பார்வைகள் ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் நினைவேந்தலை ஐயக்கண்கொண்டும், அச்சப்பார்வையோடும் பார்க்கும் தன்மைகளும் காணப்படுகின்றன.
குறிப்பாக, அடக்குமுறைமிக்க அரசுகள், தம்முடைய அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு குறித்த மக்கள் கூட்டத்தின் நினைவேந்தல் முரணாக அமையும் போது, அதனைத் தடுப்பதிலும், நினைவேந்தலுக்கான வாய்ப்பை இல்லாது செய்வதிலும் மும்முரமாகச் செயற்படுகின்றன.
அதேவேளை, ஒரு சம்பவம் தொடர்பில் இரண்டு வேறுபட்ட அல்லது ஒன்றுக்கொன்று முரணான அனுபவங்களைக் கொண்ட மக்கள் கூட்டங்கள் உள்ளபோது, சில அரசுகள் அதில் ஓர் அனுபவத்தின் உரையை பகிரங்கப்படுத்தவும், மற்றையதை அடக்குவதன் மூலம் மறக்கடிக்கச்செய்யும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஒரு சம்பவம் தொடர்பில் பல்வேறுபட்ட வித்தியாசமான அனுபவங்கள், பார்வைகள், அனுபவ உரைப்புகள் வேறுபட்ட மக்களுக்கு இருக்கலாம். இவை அனைத்தையும் பதிவுசெய்யும் சுதந்திர வௌி ஒரு நாட்டில் காணப்பட வேண்டும். அதை ஓர் அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். குறைந்தபட்சம், அரசு அதனைத் தடுக்கும், இல்லாதொழிக்கும் செயற்பாடுகளிலேனும் ஈடுபடாதிருக்க வேண்டும்.
-என்.கே. அஷோக்பரன்