உலகின் முதல் ஸ்மார்ட் ஸ்கேனர்

ஒவ்வொரு முறையும் ஆவணங்களை ஃபோட்டோ காப்பி மற்றும் ஸ்கேன் செய்ய நாம் தெருத்தெருவாக அலைந்திருப்போம்.

அதிலும் குறிப்பாக, ஸ்கேன் செய்து நம்முடைய க்ளவுட் ஸ்டோரேஜில் சேமித்து வைக்க பலரின் உதவியை நாட வேண்டியிருக்கும். அதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது உலகின் முதல் ஸ்மார்ட் ஸ்கேனர் உருவாக்கப்பட்டுள்ளது. பப் எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் ஸ்மார்ட் ஸ்கேனரான பப் முழுக்க முழுக்க ஸ்மார்ட்டான வகையில் உருவாக்கப்பட்டது.

பிற ஸ்கேனர்களை போல அல்லாமல் இது மிகவும் சிறிய அளவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பப் மூலம் நாம் ஸ்கேன் செய்யும் ஆவணங்களை நம்மால் நேரடியாக க்ளவுடில் சேமித்துக்கொள்ள முடியும். சேமித்து வைக்கும் ஆவணங்களை எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ப்ரிண்ட் செய்துக்கொள்ள முடியும்.

இந்த ஸ்கேனரில் இருந்து வெளியாகும் செவ்வக வடிவிலான இன்ஃப்ரா ரெட் கதிர்கள் மூலம் ஸ்கேன் செய்யத் தேவையான பகுதியைத் தேர்வு செய்ய முடியும். தேர்வு செய்யப்பட்ட பகுதியை இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலமாக பதிவு செய்து உடனடியாக கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்ப முடியும். அதனை ஜேபெக் (JPEG) பார்மேட்டில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பப் வயர்லஸ் கருவியாகும், இது வைஃபை மற்றும் ப்ளூடூத் மூலம் மற்ற ஸ்மார்ட் கருவிகளுடன் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. நூறு சதவீத ஆட்டோமேட்டிக் கருவியான பப், ஒரே ஒரு பட்டனுடன் வருகிறது. விடியோ கேமில் பயன்படுத்தப்படும் ஜாய் ஸ்டிக் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவு வெளிச்சம் இருந்தால் கூட ஆவணங்களை இதன்மூலம் மிகத்தெளிவாக ஸ்கேன் செய்ய முடியும். ஐந்து வண்ணங்களில் அழகாக வடிவமைக்கப்பட்ட பப், நீண்ட ஆயுளைக் கொண்ட பேட்டரி மூலம் இயங்குகிறது. தொழில்நுட்ப வல்லுநர்களின் 18 மாத கூட்டு உழைப்பினால் உருவான பப், கூடிய விரையில் நம் வீட்டில் ஓர் அங்கமாகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.!