முதன்முறையாக சூர்யாவுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சூர்யாவின் 40-வது படமான இதை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சூர்யா 40 படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி இமானின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யா 40 படக்குழு வெளியிட்ட போஸ்டர்
ஏற்கனவே பாண்டிராஜின் கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களுக்கு இசையமைத்த இமான், தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார். அதேபோல் சூர்யா படத்துக்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.