நினைவுத் தூபி தகர்ப்பு கற்றுத் தந்த பாடங்கள்!

அதிரடியாக வருகின்ற புல்டோசர் வாகனம் ஓசைபடாமல் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைகின்றது. அடுத்த கனமே அங்கு நுழைவாயிலுக்கு அருகில் முள்ளிவாய்க்காலில் இறந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்காக அமைக்கப்பட்ட தூபியை ஐந்து- ஆறு நிமிடங்களில் இருந்த இடமே தெரியாது தகர்த்தெறிகின்றது அந்த புல்டோசர் இயந்திரம். இந்த தகவல்கள் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்களால் வெளியில் சொல்லப்பட விரைந்து வந்த மாணவர்கள், அயலவர்கள், அரசியல்வாதிகளுக்கு பேரதிர்ச்சி. அங்கு இருந்த நினைவுத் தூபியைக் காணவில்லை.

களத்தில் இருந்த பொலிசாரிடம்  தகர்ப்புக்கு நியாயம் கேட்டனர் மாணவர்கள். துணை வேந்தர் இது மேலிடத்தில் இருந்து தனக்கு வந்த உத்தரவு என்றார். தமது உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அகற்றியது ஏற்றுக்கொள்ள முடியாது என்பது மாணவர்கள் தரப்பு வாதம். அங்கு பெரும் கொந்தளிப்பு நிலை. தெற்கில் பல பல்கலைக்கழகங்களில் இப்படியான நினைவுத் தூபிகள் இருக்க இங்கு மட்டும் என்ன ஒரு நீதி என்று எதிர்ப்புக்கள் வலுக்கின்றது.

இந்த செய்தி காட்டுத் தீ போல பரவி உலகில் எல்லா மூளை முடுக்குகளிலும் வாழ்கின்ற தமிழ் நெஞ்சங்களைக் கொதித்தெழ வைத்தது. கண்டனங்களும் எதிர்ப்புகளும் சர்வதேச மட்டங்களில் நடந்தது. இதற்காக திங்கள் கிழமை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அறிவிப்புச் செய்யப்பட்டு அது வெற்றிகரமாக அமைந்திருந்தது. வழக்கத்துக்கு மாறாக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் அனைத்தும் இந்த சம்பவத்துக்கு தமது கவலைகளை வெளியிட்டதுடன் ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்குமாறு பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டனர். தூபியை தகர்ப்பதற்கு அனுமதி கொடுத்த துணைவேந்தரே ஹர்த்தால் தினத்தில் காலையிலே அதே இடத்தில் தூபியை மீள் அமைக்க அடிக்கல் நாட்டியும் இருக்கின்றார். நல்லூர் பிரதேச சபை  இதற்கான அனுமதியை உத்தியோகபூர்வமாக வழங்கி இருக்கின்றது என்பதும் அனைவரும் அறிந்த கதை. இது பற்றி நாம் இங்கு பேசவரவில்லை.

ஆனால், இந்த தூபி தகர்ப்பு தொடர்பிலான பின்னணியையும் அது சொல்ல வருகின்ற செய்தியையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகின்றோம். தூபிகள் அல்லது சிலைகள் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எந்த விதமான சக்திகளும் கிடையாது என்பது கட்டுரையாளனது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் அப்படி  மண்ணாலோ கல்லாலோ சீமெந்து கொண்டோ அல்லது வேறு ஏதாவது மூலப் பொருட்களாலோ வடிவமைக்கப்பட்ட அந்த சிலைகளுக்கு- தூபிகளுக்கு மிகப்பெரிய சக்தி-பலம் மக்கள் உணர்வுகளில் இருந்து பிறப்பெடுக்கின்றது என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மிகச் சிறந்த ஒரு உதாரணம் என்பது அது தகர்த்தெறியப்பட்ட போது வெளிப்பட்டது. உலகில் வாழ்கின்ற ஏறக்குறைய 80 மில்லியன் தமிழ் உள்ளங்களை இந்த நிகழ்வு கொதிப்படையச் செய்து விட்டது. அதற்கு அப்பால் சர்வதேசத்தின் பார்வையையும் இந்த சம்பவம் கடந்த வாரம் ஈர்த்திருந்தது.

முறண்பாடான அரசியல் குழுக்கள், அமைப்புக்கள் உலகில் சிதறி வாழ்கின்ற இனத்தை மொழியால் இனத்தால் இந்த முள்ளிவாய்க்கால் தூபி ஒரே நொடியில் ஐக்கியப்படுத்தி விட்டது என்றால் நாம் முன்சொன்ன சக்திகள் அற்ற ஜடப் பொருளான அந்த தூபி உணர்வுகளுடன் இனத்தை எப்படிப் பாசப் பிடிப்பால் கட்டிப் போட முடிந்தது என்பதை கற்பனை செய்யும் போது உடல் புல்லரித்துப் போகின்றது. வழக்கமாக இப்படி சம்பவங்கள் நடக்கிற போது பாதிக்கப்பட்ட இனம் மட்டும்தான் வீதிக்கு வந்து போராடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அது இனம், மதம் என்ற எல்லைகளைக் கடந்து மனித உணர்வுகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தகர்க்கப்பட்ட போது இதற்கு தமது கண்டனங்களை வெளியிட்ட முஸ்லிம்கள் இந்த முறை தாமும் அதற்கு முன்மொழியப்பட்ட ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்கள். தெற்கில் அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட தமது பகிரங்க கண்டனங்களை வெளியிட்டனர்.

இதற்கு பிரதான காரணம் தற்போது முஸ்லிம்களின் கொரோனா மரணங்கள் எரிக்கப்படுவதும் அதற்கு எதிராக தமிழ் அரசியல் தலைவர்கள் வழங்குகின்ற ஒத்துழைப்பு என்பதும் தெரிந்ததே. காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தெரியும் என்ற நியதி இது. அது எப்படியாக இருந்தாலும் அவர்கள் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. பேரின அடக்குமுறைகளின் போது சிறுபான்மை இனங்கள் ஐக்கியப்பட வேண்டியதன் அவசியத்தை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தெளிவாக இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினருக்கு உணர்த்தி இருக்கின்றது.

எனவே நாம் வழக்கமாகச் சொல்லி வருவது போல இந்த நாட்டு சிறுபான்மை சமூகங்கள் உரிமைகளை வென்றெடுத்து இந்த நாட்டில் கௌரவமாக வாழ வேண்டுமாக இருந்தால் தமக்குள் புரிந்துணர்வுகளுடன் சில உடன்பாடுகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் முதலில் இனம் கண்டு அதற்கான ஒரு பொது வேலைத் திட்டத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது எமது கருத்து. அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதத்துக்காக இதில் பச்சோந்தித்தனமாக நடந்து கொள்ள நிறையவே வாய்ப்புகளும் இருந்தாலும் சிவில் அமைப்புகளும் சமூகத் தலைமைகள் இது விடயத்தில் காத்திரமான பங்களிப்பை செய்ய முடியும் என்பது எமது எதிர்பார்ப்பு. சிறுபான்மை சமூகங்கள் ஒன்றுபட நல்ல களத்தை இனவாதிகள் அமைத்துத் தந்திருக்கின்றார்கள். பாவித்துக் கொள்ளத் தவறினால் இது பாரிய வரலாற்றுத் தவறாக அமையும்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் இங்கு வந்து ஈழத் தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசு சில நெகிழ்ச்சிப் போக்கை கையாள வேண்டும் என்று சொல்லிவிட்ட போய் ஓரிரு நாட்களில் இலங்கை அரசு இந்த தூபியைத் தகர்த்தெறிகின்றது என்றால் நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருங்கள். ஈழத் தமிழர் விவகாரத்தில் எங்களது தீர்மானமும் நடவடிக்கைகளும் இதுதான். அவர்களுக்கு நாம் எதையும் கொடுக்கப் போவதில்லை என்று இந்தியாவின் கன்னத்தில் அறைந்தாற் போல் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

பக்கத்தில் இருக்கின்ற மிகப்பலமான இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் சீனாவின் துணையுடன் இலங்கை பயணிக்க முடிவு செய்து விட்டது என்பது மிகத்தெளிவு. எம்மை சர்வதேசத்தாலும் இந்தியாவாலும் நெருங்க முடியாது என்ற செய்தியை இந்தியாவுக்கு கொடுப்பதற்காக இந்த தூபி தகர்ப்பு விவகாரம் இருக்கலாம். மேலும் கொழும்புத் துறைமுக கிழக்கு இறங்குதுறையை இந்தியா பெற்றுக் கொள்ள எடுத்த முயற்சிகளுக்கு தொழிற்சங்கங்களும் அரசை பதவிக்கு அமர்த்திய கடும்போக்கு பௌத்த குழுக்களும் கடுமையாக எதிர்ப்பதால் இந்தியாவுக்கு அதனை வழங்குவதில் அரசு பின்னடிக்கின்றது என்று இந்தியா எண்ணுகின்றது. சீனாவுடன் ஒரு சமநிலைக்கு இந்தியா அதனை எதிர்பார்க்கின்றது.

இதற்கிடையில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையை அபிவிருத்தி செய்ய இந்தியாவுக்கு கொடுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ஜீ.ஆர். உறுதிபடக் கூறி இருக்கின்றார். இப்படி அவர் பேசினாலும் ஒப்பந்தப்படி இலங்கைக்கு 51. இந்தியாவுக்கு 49. விகிதத்தில் இது பகிரப்பட இருக்கின்றது என்பதே யதார்த்தம். உள்நாட்டில் இருக்கின்ற எதிர்ப்பின் காரணமாகத்தான் இந்தியாவுக்கு விற்கவோ  அல்லது குத்தகைக்குக் கொடுக்கவோ மாட்டோம் என்று ஊடகங்களுக்கு கதை விடுகின்றார்கள் அரசியல் தலைவர்கள்.

எனவே துறைமுக விடயத்தில் இந்தியாவை இலங்கை முற்று  முழுதாக நிராகரிக்கின்றது என்று நாம் இதனை எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஜனாதிபதியைப் போன்று பிரதமரும் இதற்குச் சமாந்திரமாக ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருந்தார். ஆனால் துறைமுக அமைச்சர் ரோஹித்த கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். உண்டு- இல்லை என்ற விளையாட்டாக இது இருக்கின்றது. எனவே ஒரு காலத்தில் கருபியன் கடலில் கியூபா-அமெரிக்க இடையே நடந்த முறுகலைப் போல்தான் இப்போது இந்திய-இலங்கை விவகாரம். என்னதான் இலங்கை சீனாவுடன் உறவாடினாலும் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இலங்கையால் வாழமுடியாது.

தனக்கு கன்னத்தில்  அறைந்தால் போல் இலங்கை தொடர்ந்தும் நடந்து கொள்வது இந்தியா அதனைப் பெரிய தலைகுனிவாகப் பார்க்கின்றது. நமக்கு இந்தியாவில் இருந்து வருகின்ற செய்திகளின்படி கச்சதீவை இந்தியா மீளப் பெற்றுக் கொள்வதற்கான அதிரடி வியூகங்களில் இறங்கி இலங்கைக்கு ஒரு கடும் எச்சிரிக்கையை மோடி கொடுப்பதற்கும் வாய்ப்புக்கள் உருவாகி இருக்கின்றது. துறைமுக விடயத்தில் இலங்கை மென்போக்குடன் நடந்து கொண்டால் கச்சதீவு விவகாரத்தில் இந்தியா  மௌனிக்கவும் இடமிருக்கின்றது.

இந்திரா-ஸ்ரீமா நட்புறவால் 286 ஏக்கர்கள் விஸ்தீரமான கச்சதீவு நிலப் பரப்பை 1974ல் இந்தியா இலங்கைக்குக் கையளித்தது. 1976ல் அதில் மேலும் சில  திருத்தங்களை இலங்கை தனக்குச் சாதகமாக செய்து கொண்டது. தமிழ் நாடு ரமேஷ்வரத்துக்கு அருகில் உள்ள இந்த நிலப்பரப்பு ராமநாதபுரம் ஜில்லாவுக்கு-மாவட்டத்துக்குச் சொந்தமானது. இப்படி ஒரு பிரதேசத்தை இன்னும் ஒரு நாட்டுக்குக் கையளிப்பதாக இருந்தால் அது லோக்சபாவில்-இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். நாம் அறிந்த வரை இன்னும் அப்படியான ஒரு அனுமதியை லோக்சபா இதற்கு வழங்கவில்லை என்று நினைக்கின்றோம்.

எனவே இதனை இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து இலங்கையை அச்சுறுத்தவோ அல்லது வேறு ஏதும் வழிகளில் தலைவலி கொடுக்கவோ முடியும்.  மோடி அப்படி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரு மாம்பழங்களை வீழ்த்துவது போல இலங்கையையும் அச்சுறுத்தி தமிழகத்தில் நடக்க இருக்கின்ற தேர்தலில் தனது கூட்டணிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதாகவும் அந்த நடவடிக்கை உதவ முடியும் என மோடி நிருவாகத்தின் கணிப்பாக இருக்க முடியும். மேலும் இது காங்கிரஸ் விட்ட தவறு என்று மேடைகளில் பேசவும் செல்வாக்கு கம்மியாக இருக்கும் தமிழ் நாட்டில் மோடியை ஹீரோவாக்கவும் இது உதவக் கூடும். பெப்ரவரியில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறான தூபிகள் எங்கிருந்தாலும் தேடி அழிக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றார். உதய கம்மன் பில இது முற்றிலும் துணைவேந்தர் சற்குணராசா பார்த்த வேலை என்று சொல்கின்றார். இப்போது தகர்த்தவரும் திருப்பி அமைப்பவரும்  அவரே என்று பேசுகின்றார். கல்வி அமைச்சர் ஜீ.எல். துணை வேந்தர் நடவடிக்கை நியாயமானது என்கின்றார். நாம் அறிந்த வரை இதுவரை பிரதமரோ ஜனாதிபதியோ இது பற்றி எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.தாங்கள் இது விடயத்தில் கருத்துச் சொன்னால் அது மேலும் சிக்கலை  ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். பல்கலைக்கழக ஆணைக்குழு இது யாழ். பல்கலைக்கழக முதல்வர் பார்த்த வேலை. அதற்கும் எமக்கும் தொடர்பு கிடையாது என கை விரிக்கின்றது. இது பல இன மாணவர்கள் கல்வி பயில்கின்ற இடம். அந்த வகையில் துணைவேந்தர் சற்குணராசா சரியான முடிவையே எடுத்திருக்கின்றார் என்று பந்தை அவர் பக்கம்  எறிந்திருக்கின்றது.

ஆனால் தனக்குள்ள அழுத்தம் காரணமாகத்தான் இதனைத் தான் செய்ததாகவும் ஒரு தமிழன் என்ற வகையில் இது தனக்கும் வலியையும் நோவினையும் கொடுக்கின்றது என்று பகிரங்கமாகக் கூறினார். இப்போது தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு அடுத்தவர்கள் தப்பித்துக் கொண்டுள்ளனர். தேவைப்பட்டால் தான் அனைத்தையும் பகிரங்கப்படுத்துவேன். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருக்கின்றது என்று சொல்லி அவரே 11ம் திகதி திங்கள் காலையில் மீண்டும் நினைவுத் தூபியை அமைக்க அடிக்கல் நாட்டி இருக்கின்றார். எனவே ஒரு கௌரவமான துணைவேந்தரை அரசு ஜோக்கராக்கி விட்டது.

மேலும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இருந்த மாணவர்களுக்கும் அவர் கையாலே பானமும்  கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் துணைவேந்தர் சற்குணராசா. அவர் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார் என்பது அவருடைய பேச்சுக்கள் மூலம் உணரமுடிகிறது. ஆனால் பிரச்சினை இத்துடன் முடிந்து விட்டது என்று நாம் கருதவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு வந்து அரச மற்றும் தமிழ் தலைவர்களை சந்தித்த போது நமக்குத் திருப்தி என்று சுமந்திரன் பேசி இருந்தார். சில மணி நேரங்களில் என்ன நடந்தது. எனவே இந்த நினைவுத் தூபி விவகாரம் முற்றுப் பெற்றுவிட்டது என்று எவரும் கருதக்கூடாது. அது பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக வரும் என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

சீனா விவகாரத்தில் இந்தியா மிகுந்த அச்சத்தில் இருக்கின்றது. அதனால் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அது எந்தளவுக்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக இதே நிலைப்பாட்டில்தான் கடந்த காலங்களில் இருந்த வந்திருக்கின்றார்கள். ஆனால் வடக்கிலும் தெற்கிலும் உள்ள இந்திய பொது மக்கள் ஈழத் தமிழர்கள் நலனுக்கு இந்தியா எதையாவது செய்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது எமது அவதானம்.

வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அரசு தலைவர்களைச் சந்தித்து என்ன சொன்னாலும் இலங்கை அரசு அதனை காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பதற்கு எம்மிடம் வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. அவர் வந்து போன அடுத்த நிமிடமே ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சரத் வீரசேகர ‘எமக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. இலங்கை விவகாரத்தில் எல்லா விடயங்களையும் நாமே தீர்மானிப்போம்’ என்று அடித்துப் கூறி இருந்தார். இந்தியா விவகாரத்தில் ராஜபக்ஸாக்களுக்கிடையில் கடுமையான முறண்பாடுகள் தற்போது மேலோங்கி இருக்கின்றது என்பதும் இது பற்றி ஜனாதிபதி ஜீ.ஆருடன் சகோதரர்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி இருக்கின்றார்கள் என்றும் தெரிய வருகின்றது. ஆனால் ஜனாதிபதி தனது பக்கத்தில் உள்ள நெருக்கடிகளை அவர்களிடம் சொல்லி ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாதவராக இருக்கின்றார் என்றுதான் அந்தரங்க வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

சுருக்கமாகச் சொன்னால் ஜனாதிபதி ஜீ.ஆர். கடும்போக்கு பௌத்த அரசாங்கம் ஒன்றை நாட்டில் முன்னெடுக்க விரும்புகின்றார். அதே நேரம் பிரதமர் எம்.ஆர். மற்றும் பசில் பௌத்த ஆதரவுடனான மிதவாத அரசங்கம் ஒன்றை முன்னெடுக்க விரும்புகின்றார்கள். எப்படியும் இந்த இரு தரப்பும் சீனாவை நம்பியே அரசியலை முன்னெடுப்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு.