“யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா?”
போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது?
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை நாட்ட வைத்திருக்கிறது மாணவர்களின் போராட்டமும், சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும்.
மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டப்பட்டதன் மூலம், இந்தச் செயலுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் உருவான பேரெழுச்சியும், தமிழகத்திலும், உலகெங்கிலும் இருந்து கிளம்பிய எதிர்ப்பும், தற்காலிகமாக தணிக்கப்பட்டிருக்கிறது.
வடக்கு, கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவிருந்த அதிகாலைப் பொழுதில், மாணவர்களைத் தேடிச் சென்று, மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை சட்டபூர்வமாக அமைப்பதற்கு அனுமதி வழங்கினார் துணைவேந்தர். அத்தோடு நிற்காமல், காலையிலேயே அடிக்கல்லையும் நாட்டி, தனது தவறைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனாலும், அவர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எது எவ்வாறாயினும், புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள துணைவேந்தர், அது போர் நினைவுச் சின்னமாகவோ, அமைதிக்கான நினைவுச் சின்னமாகவோ இருக்காது, அவ்வாறான எதுவும் பொறிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் பதிவுகளில் அது அமைதிக்கான நினைவுச் சின்னமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதேவேளை, முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகமே இந்த நினைவுச் சின்னத்தை அகற்றியதாக கூறிய மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, துணைவேந்தர் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் என்றும் பாராட்டியிருந்தார்.
அத்துடன் பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்றும், அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான அமைதிச் சின்னம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான அனுமதி தான், மானியங்கள் ஆணைக்குழுவினால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.
பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்று கூறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கனவே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, வயம்ப, மொறட்டுவ போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே.வி.பி.யினரின் நினைவுச் சின்னங்களை மட்டும் ஏன் இவ்வளவு காலமும் அகற்றாமல் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.
அவரே, இப்போது பல்கலைக்கழகங்களில் போர்கால முரண்பாடுகளை மறந்து மாணவர்கள் இணக்கமாக கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின், எதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியை மாத்திரம் அகற்ற வேண்டும் என்று அவர் துணைவேந்தருக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டார்?
போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது?
ஆனையிறவில், பலாலியில், கிளிநொச்சியில், முள்ளிவாய்க்காலில் என்று ஏராளமான நினைவுச் சின்னங்கள் தமிழ்ப் பகுதிகளில்- ஆக்கிரமிப்பின் சின்னமாக அடையாளப்படுத்தி நிற்கின்றன. இந்த நினைவுச் சின்னங்கள் எதுவும் சட்டபூர்வமாக உள்ளூராட்சி சபைகளின் அனுமதிகளுடன் கட்டப்பட்டவையல்ல.
பல்கலைக்கழத்தில் அகற்றப்பட்டது போல, சட்டபூர்வமற்ற கட்டடங்களை அகற்றுவதாயின், உள்ளூராட்சி சபைகளும் இந்த நினைவுச் சின்னங்களை அகற்றியிருக்க முடியும். போர் நினைவுச் சின்னங்களை அழிப்பதும், வரலாற்றை அழிப்பதும் ஒன்று தான்.
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் அனைத்தையும் அழித்து நினைவுகூரல்களைத் தடுக்கும் அராஜகத்தையே அரங்கேற்றியது.
இப்போதும் அதே விதமாகத் தான் முள்ளிவாய்க்கல் நினைவுத் தூபியை அழித்திருக்கிறது,
இது இந்தளவு பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. விளைவுகள் விபரீதமாகும் என்ற அச்சத்தினால் தான், இடித்தவர்களே அதனை மீள அமைக்க இணங்கினார்கள்.
இந்தச் செயலுக்கு தமிழர்களிடம் இருந்து மட்டும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கவில்லை. முஸ்லிம்கள் எதிர்த்தார்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்த்தது, சில பௌத்த பிக்குகள், நியாயமாக சிந்திக்கும் சிங்கள மக்களும் கூட எதிர்த்தார்கள்.
பல வெளிநாடுகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பகையாளிகளாக நினைக்கும் அரசாங்கம் ஏன், போரில் கொல்லப்பட்ட மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும், சின்னத்தை அகற்ற முனைந்தது என்பது தான் கேள்வி.
பெளத்த பிக்கு ஒருவர் தனது முகநூலில், இந்த நாட்டுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்திய வெளிநாட்டவர்களின் நினைவுச் சின்னங்களையே அகற்றாத போது, இதனை மட்டும் ஏன் அகற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கருத்தின் நியாயம், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையாளர்களுக்கு புரியவில்லை.
நினைவுச் சின்னங்களை பேணுவது நல்லிணக்கத்தின் முக்கியமான ஒரு வழிமுறை என்பதை கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிபடக் கூறியிருக்கிறார்கள்.
“போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பது முக்கியம். இது கடந்த கால காயங்களை குணப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது” என்று பிரித்தானிய வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் குறிப்பிட்டிருந்தார்.
நினைவுச் சின்னத்தை அழிப்பது, ஐ.நா மனித உரிமைகள் கோட்பாட்டை மீறுகின்ற செயல் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார்.
ஆனாலும் இலங்கை அரசுக்கு இதுபோன்ற விடயங்கள் எதுவுமே மீறல்களாகத் தெரிவதில்லை. அதனால் தான், திரும்பத் திரும்ப தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறது. இப்போது கூட, அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீள அமைப்பது என்பது இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை.
ஏனென்றால், அழிக்கப்பட்டதை கொண்டாடியவர்கள் இன்னும் தீவிரமாக அதனை எதிர்ப்பார்கள். இதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான ஒரு நினைவுத் தூபி இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தவர்கள் கூட இப்போது அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆக, இனவாதிகளும், பேரினவாத சிந்தனையாளர்களும், இன்னும் தீவிரமாகவே அதனை எதிர்ப்பார்கள்.
அவர்களின் எதிர்ப்பையும், அமைதிச் சின்னத்தைக் கட்டியெழுப்பும் கனவுடன் உள்ள மானியங்கள் ஆணைக்குழுவினது நிலைப்பாட்டையும் மீறி துணைவேந்தர் எவ்வாறு தனது வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறார் என்பது தான் முக்கியமான கேள்வி.
எவ்வாறாயினும், இந்த விவகாரத்துக்கு சூட்டோடு சூடாக தீர்வு காண்பது தான் பொருத்தமானது. இதனை ஆறப் போட்டால், அது நீர்த்துப் போகச் செய்யும் உத்திகளின் மூலம், அரசாங்கம் தனது காரியத்தை சாதித்து விடும் ஆபத்து உள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே, பெயருடனும், வடிவத்துடனும், பல்கலைக்கழத்தில் நாட்டப்படுவது மட்டும் தான் இதற்கான பரிகார நீதி. அந்தப் பரிகார நீதியை துணைவேந்தர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதில் தான் வரலாறு அவரை எந்த இடத்தில் வைக்கப் போகிறது என்பதை உறுதிப்படுத்தும்.
கபில்