பேரறிவாளன் விடுதலையில் மாநில உரிமையைத் தக்கவைக்குமா தமிழக அரசு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, பல காலமாகப் பேசப்பட்டுவருகிறது. அரசமைப்பு உறுப்பு 161-ன்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் அளித்த மனுவைத் தமிழக அரசு பரிசீலனை செய்யலாம் என கடந்த 2018-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 6-ம் தேதி அன்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு உத்தரவிட்டது.

இது தொடர்பாக மாநில அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு சென்ற ஆண்டு, ஜனவரி மாதம், 21-ம் தேதி உத்தரவிட்டது. `நாங்கள் 09.09.2018 அன்று அமைச்சரவையைக் கூட்டி, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் முன்விடுதலைக்குப் பரிந்துரை செய்து, ஆளுநரின் கையெழுத்துக்காக அனுப்பிவிட்டோம். கோப்பு ஆளுநரிடம் நிலுவையில் இருக்கிறது’ என 11.02.2020 அன்று மாநில அரசால் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம், ஆளுநரிடம் தாமதத்துக்குக் காரணம் கேட்டு, இரண்டு வாரங்களில் சொல்லும்படி வாய்மொழி உத்தரவிட்டது.

இது குறித்து ஆளுநர் அலுவலகத்துக்கு விளக்கம் கேட்டு மாநில உள்துறைச் செயலர் கடிதம் எழுதியதாகவும், `ஆளுநர், ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பல்நோக்கு கண்காணிப்புக்குழுவின் இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதாகக் கடிதம் பெறப்பட்டிருக்கிறது’ எனச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப் பேரவையில் 20.03.2020 அன்று அறிவித்தார். இதே காரணத்தை பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கக் கோரி அற்புதம்மாள் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வரும்போது மாநில அரசின் வழக்கறிஞர் ஏ.நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில் தெரிவித்தார்.

இந்தநிலையில்தான், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன்னை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டு பேரறிவாளன் கடந்த ஆண்டு, நவம்பர் 3-ம் தேதி பல்நோக்கு விசாரணை முகமை குறித்த தனது வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வின் முன்பு வழக்கு தாக்கல் செய்தார். பேரறிவாளனின் விடுதலை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு `பல்நோக்கு விசாரணைக்குழுவின் விசாரணைக்கும், பேரறிவாளன் விடுதலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ எனக் கடந்த 03.11.2020 அன்று அறிவித்தது.

பல்நோக்கு விசாரணைக்குழுவின் விசாரணையில், பேரறிவாளனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும், பல்நோக்கு விசாரணைக்குழுவின் அறிக்கையை ஆளுநர் கோரவில்லை எனவும், அவ்வாறு கேட்டாலும் தர முடியாது எனவும் சொல்லி பல்நோக்கு கண்காணிப்புக்குழு உச்ச நீதிமன்ற அமர்வில் 20.11.2020 அன்று மனு தாக்கல் செய்தது. மேலும், அம்மனுவில் பேரறிவாளன் விடுதலை கோரும் மனுமீது ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும், தங்கள் அமைப்புக்கு எந்தப் பங்குமில்லை என அறிவித்தது.


இந்தநிலையில், பேரறிவாளனின் விடுதலை வழக்கு, கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கே.எம்.நடராஜன், `இதில் ஜனாதிபதி மற்றும் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு. ஆளுநருக்கோ, மாநில அரசுக்கோ எவ்வித அதிகாரமும் இல்லை’ என வாதிட்டார். அப்போது தமிழக அரசு சார்பில் அன்று ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் இதற்கு எவ்விதமான மறுப்பும் சொல்லாதது தமிழகத்தில் பெரிய விவாதப் பொருளாக ஆனது.

இது தொடர்பாக, அப்போது அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், திட்டக்குழு துணைத் தலைவருமான பொன்னையனிடம் தொடர்புகொண்டு பேசியபோது, `இந்த விடுதலை என்பது அரசின் கொள்கை முடிவு. அதைப் பிரதிபலிக்கும் வகையில் வேறு வழக்கறிஞர் ஆஜராவார்” என உறுதிபட தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில்தான் பேரறிவாளனின் விடுதலை வழக்கு வருகிற 20.01.2021 அன்று இறுதி விசாரணைக்கு வரவிருக்கிறது. 30 ஆண்டுக்கால காத்திருப்பு அன்று முடிவுக்கு வருமா… மாநில அரசு தனது அரசமைப்பு இறையாண்மை அதிகாரத்தை தக்கவைக்கப் போராடுமா… பேரறிவாளன் அன்று விடுவிக்கப்படுவாரா… போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் பேரறிவாளனின் விடுதலை விவகாரத்தை நீதிமன்றத்தில் தமிழக அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

விகடன்