கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் செயற்பாட்டைத் தடுக்க, மக்கள் போதிய ஆதரவை வழங்கவில்லை என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் அழகையா லதாகரன் மேலும் கூறுகையில்,
“காத்தான்குடியிலுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் 10 பிரிவுகளை தொடர்ச்சியாகத் தனிமைப்படுத்த வேண்டும் என நாங்கள் பரிந்துரை விடுத்துள்ளோம். இதனடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிற்பாடு இந்த 10 கிராமசேவகர் பிரிவுகளில் எவ்வாறு தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலை அமுல்படுத்திக் கொண்டு செல்வது தொடர்பாக ஆராய்வதற்காக, இராணுவம் மற்றும் பொலிஸ் சுகாதாரப் பிரிவினருடன் இந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்து, எந்தெந்த வீதி மற்றும் பகுதி என எல்லையைத் தீர்மானிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம் சுகாதார பணிப் பாளர் நாயகத்துக்கு 10 பிரிவுகளை தனிமைப்படுத்துவது தொடர்பாக சிபாரிசுகளை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதற்கான உரிய பதில் ஓரிரு தினங்களில் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக மிகுதியான பகுதி விடுவிக்கப்படும். இதேவேளை இவ்விடயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு போதியதாக இல்லை. ஆகவே, அவர்களும் முழுமையான ஆதரவை வழங்கினால் கிழக்கில் தொற்றை இல்லாமல் செய்ய முடியும்” என்றார்.