யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டமையும் அதை நேரடியாக காணொளி மூலம் பார்த்ததால் ஏற்பட்ட எல்லை மீறிய துயரங்களும் வார்த்தைகளால் அளவிட முடியாத நிஜங்களாகும்.
மேற்படி சம்பவம் இடம்பெற்ற அந்த கணப்பொழுதில் இருந்தே அதனை கண்டித்து திக்கெட்டும் பரவிய போராட்ட உணர்வலைகள் கவனத்தைப் பெற்ற ஒரு சம்பவமாக மாறி இருந்தது.
தொடர்ச்சியாக தனக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவும் இறுதியில் உங்களால் முடியாவிட்டால் நாங்கள் அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிவரும் என்ற இறுதி எச்சரிக்கையின் பின்னரே தான் அந்த முடிவுக்கு வந்ததாக யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் தனது பக்க நியாயத்தை கூறியிருந்தார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக அரசாங்கத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என கல்வி அமைச்சர் உட்பட பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில என அனைவரும் உபவேந்தரை கைகழுவிவிட்டுள்ளனர். எனவே நிர்க்கதியான நிலைக்கு சென்ற உபவேந்தர் தானே முன்வந்து புதிய நினைவு ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
உண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட இந்த நாடகத்திற்கு மூலக்கதை, இயக்குனர், வசனகர்த்தா, அரங்க ஒழுங்கமைப்பாளர் என பலர் திரைமறைவில் செயற்பட்டிருந்தாலும் இறுதியில் ஏதோ காரணத்திற்காக அனைத்தும் மறைக்கப்பட்டு பாவம் துணைவேந்தர் பலிகடா ஆகியுள்ளார். ஒருவேளை சர்வதேச அழுத்தம் காரணமாக இருக்கலாம் அல்லது போனால் ஜனாதிபதி கூறும் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பும் முனைப்பால் ஏற்பட்ட பின் வாங்குவதலாகவும் இருக்கலாம். என்றாலும் எல்லாம் குழப்பமாகவே இருக்கிறது.
மேற்படி போராட்டத்திற்கு வடக்கு ,கிழக்குப் பகுதியைச் சார்ந்த அனைத்து வெகுஜன அமைப்புகளும் தமது பூரண ஆதரவை வழங்கியிருந்தனர். இறுதியாக நடைபெற்ற ஹர்த்தால் போராட்டம் வடக்கு, கிழக்கில் முதல் முறையாக இஸ்லாமிய சகோதரர்களின் ஆதரவையும் பெற்றிருந்தது. அது மாத்திரமல்லாது இப்போராட்டத்துக்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தமது ஆதரவை வழங்கியிருந்தது.
1953 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் நடத்திய ஹர்த்தால் போராட்டத்துக்கு அன்றைய காலகட்டத்தில் தமிழரசு கட்சியும் தனது ஆதரவை வழங்கியிருந்தது. மேற்படி ஹர்த்தால் போராட்டம் வெற்றிபெற தமிழ் மக்களின் ஆதரவு ஒரு பலமான சக்தியாக அன்று அமைந்திருந்தது. அதன் பின்னர் தமிழ் மக்களின் ஆதரவை பெறும் அளவுக்கு இலங்கையின் பாரம்பரிய இடதுசாரி கட்சிகளின் நேர்மை நம்பகத்தன்மை கொண்டதாக அமைந்திருக்கவில்லை.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட வெற்றியானது 1980 காலப்பகுதியில் ஈழ மாணவர் பொதுமன்றத்தின் தலைவர்களில் ஒருவரான டேவிட்சனை அன்றைய காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தினர் கைது செய்தபோது வடபகுதியில் இயங்கிய அனைத்து சிவில் அமைப்புகளும் ஒருமுகமாக களத்தில் குதித்தன. அன்று இடம்பெற்ற மக்கள் எழுச்சியை கண்டு அஞ்சிய ராணுவம் டேவிட்சனை கைது செய்த அன்றே விடுதலை செய்திருந்தது.
இன்றும் கூட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போன உறவுகளுக்கான பதில் என போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மேலும் வரவிருக்கும் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அங்கீகாரத்தை பெறுதல் என எம்முன்னே அதிகப் பொறுப்புகள் ஒன்றின் பின் ஒன்றாக நிரலாக உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் எமக்கான களமாக மாறியுள்ளது. எனவே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு எவ்வாறு ஒன்றிணைந்தோமோ அதே போன்று அனைத்து விடயங்களிலும் ஓர் அணியாக ஒரு குரலாக பயணிப்பதற்கு தயாராக வேண்டும்.
திரிபடைந்த புதிய கொரனோ வைரஸின் தாக்கத்திற்கு இலங்கையில் ஒருவர் ஆளாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கொரனோ வைரஸ் இன் முதலாவது அலையை வெற்றிகரமாக கையாண்டோம் என்ற இறுமாப்பில் இருந்ததால் இரண்டாவது அலை ஏற்பட்டபோது கோட்டை வி ட்டவர்களாக அரசாங்கம் மாறியிருக்கிறது. தற்போதும் கூட சுகாதார நிபுணத்துவ அறிவுரைகளை கருத்திற் கொள்ளாது சுற்றுலாத்துறையை மீண்டும் இயங்க வைக்க எடுக்கப்படும் எழுந்தமானமான முயற்சிகள் இந்த நாட்டை பாரிய இழப்புகளை சந்திக்க செய்யும் கைங்கரியமாகவே மாறப்போகிறது.
இலங்கையில் தற்போது அரச தரப்பினர் தண்டனைகளில் இருந்து விடுதலையாகி வரும் நிலையில் எதிரணியினர் உள்ளே போகும் நிலை தொடர்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னண்டோ தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் யாவரையும் அச்சமடைய செய்யும் நிலையே தோற்றுவித்துள்ளது.
1848 ஆம் ஆண்டு கால் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோர் இணைந்து பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையை வெளியிட்டனர். அவ்வறிக்கையில் மார்க்ஸ் “கம்யூனிஸ்ட் என்று குற்றம் சுமத்தப்படாத எதிர் அணியினர் உள்ளனரா ?” என்ற கேள்வியை எழுப்பி இருந்ததுடன் ஆட்சியாளருக்கு விரோதமானவரை கம்யூனிஸ்ட் என்ற அடைமொழியால் அழைக்கும் தன்மை தொடர்கின்றது என்றும் குறிப்பிட்டு இருந்தார். கடந்த காலப்பகுதியில் சகல எதிரணியினரையும் பயங்கரவாத வட்டத்திற்குள் கொண்டு வரும் முயற்சியே ஆளும் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. தற்போது கொரனோ கட்டுப்பாட்டை மீறியவர்கள் என்ற துரும்பு எதிரணிக்கு எதிராக பாவிக்கப்படும் சூழ்நிலையில் நிலைமைகள் மாறி வருகின்றன.
இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் இந்திய உயர் நீதிமன்றம் தலையிட்டிருப்பது போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் டிரம்புக்கு எதிராக இரண்டாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறியிருப்பது அமெரிக்காவில் பாசிசத்திற்கும் இனவாதத்திற்கும் எதிரான அமெரிக்க மக்களின் ஒன்றிணைந்த வலிமையை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த உணர்வுகள் மேற்குலகத்திற்கும் பரவி வருவதால் இனவாதத்துக்கு எதிராக ஜனநாயகத்திற்கு ஆதரவு வேண்டி போராடும் அனைத்து பிரிவினருக்கும் நம்பிக்கை தரும் நிலைமைகள் கனிந்திருக்கிறது என்பதே யதார்த்த நிலையாகும்.
நடராஜா ஜனகன்