கிளிநொச்சியில் கடந்த ஒருவாரகாலமாக சங்கத்தின் ஜனநாயக பண்புகளைக் காப்பாற்றுமாறு கோரி தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டக் களத்தில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கருத்துத் தெரிவிக்கும்போதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
கடந்த ஆறு நாட்களாக கிளிநொச்சி மாவட்ட தென்னை பனம்பொருள் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தைச் சார்ந்த இரண்டு தொழிலாளிகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே இருந்த நிர்வாகத்தை ஊழல்கள் நிறைந்ததென காரணம் காட்டி கூட்டுறவு ஆணையாளர் அந்த நிர்வாகத்தைக் கலைத்து ஐந்துபேர் கொண்ட ஒரு புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்ததை எதிர்த்தும் உடனடியாகப் புதிய நிர்வாகத்தை மீண்டும் ஸ்தாபிக்குமாறும் அதற்கான தேர்தலை நடாத்துமாறு கோரியும் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய 550 குடும்பங்களுக்கு மேல் பாதிப்படைந்துள்ளது. தவறணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாழ்வாதாரங்கள் அற்று ஒரு வேளை உணவிற்கே அல்லலுறும் நிலைக்கு இந்தக் குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளது.
சாதிரீதியான ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்டுள்ள இந்த சமூகத்தை ஆணையாளரின் மேற்படி முடிவானது அவர்களை பொருளாதார நெருக்கடிக்கும் தள்ளியுள்ளது. ஏறத்தாழ ஒருவாரமாக உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டுறவுத்துறை சார்ந்த தொழிலாளிகளை இதுவரை கூட்டுறவு ஆணையாளர் நேரில் சென்று சந்திக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.
கூட்டுறவுத்துறையானது முன்னேற்றப்படவேண்டுமாக இருந்தால், அந்தத் துறையின் ஜனநாயகப் பண்புகள் பாதுகாக்கப்படவேண்டும். கிளிநொச்சி தென்னை பனம் பொருள் கூட்டுத்தாபனத்தைப் பொறுத்தவரையில், நூறுபேரைக் கொண்ட பொதுச்சபை ஒன்று இருக்கின்றது.
அந்த பொதுச்சபையுடன் கலந்துரையாடாமல், நடைமுறையில் இருந்த நிர்வாகத்தைக் கலைத்து ஒரு குடும்ப அங்கத்தவர்கள் உறவினர்களை உள்ளடக்கிய புதிய நிர்வாகத்தை அமைத்ததென்பது ஜனநாயக விரோதச் செயல் என அப்பொதுச்சபையினர் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு முந்தைய நிர்வாகக்குழு தவறு செய்திருந்தால் பொதுச்சபை தாமாகவே வேறொரு நிர்வாகசபையைத் தெரிவு செய்துகொடுத்திருக்க முடியும். அதனை விடுத்து, கூட்டுறவுச் சங்கங்களின் துணைவிதிகளுக்கு முரணாக ஆணையாளர் நடந்துகொண்டமையை அந்த சங்கத்தின் பொதுச்சபையினர் கண்டிக்கின்றனர்.
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளை ஒருவாரமாக நேரில் சென்று சந்திக்காமல், அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலித்து அவர்களின் போராட்டத்தை முடித்து வைப்பதற்கு முயற்சிகளை எடுக்காமல் இருப்பது ஒரு சிறந்த நிர்வாகத்திற்கு ஏற்புடைய ஒரு செயலாக இருக்க முடியாது. சங்கத்தின் நிர்வாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்களை விசாரிப்பது ஒருபுறம் நடக்க, சங்கத்தின் அன்றாட செயற்பாடுகள் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியம்.
உயிரைப் பணையம் வைத்து சீவல் தொழில் செய்யும் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளோடு விளையாடாமல் சங்கத்தின் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வைப்பதே சிறந்த நிர்வாகமாகும்.
இறுதியாக, ஒருவாரமாக சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளின் நிலையை மனிதாபிமானத்தோடு அணுகுமாறும் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் போராட்டத்தை முடித்துவைத்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுமாறும் வேண்டுகின்றேன்.