அவுஸ்திரேலியாவில் புதிய வகை கொரோனா சமூகத்திற்குள் பரவுகின்றதா என அச்சம்

புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் உருவாகியுள்ள சமூக பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மூன்று நாட்களிற்கு முடக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பிரதமர் அனஸ்டேசியா பாலஸ்சே அறிவித்துள்ளார்.

ஹோட்டலின் தனிமைப்படுத்தல் பணியாளர் பி117 என்ற வகை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே அவர் புதிய முடக்கலை அறிவித்துள்ளார்.

அவருடன் தொடர்பிலிருந்த 179 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட வகை வைரஸ் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களிடம் முன்னர் காணப்பட்ட போதிலும் சமூகத்தில் காணப்படவில்லை.

புதிய கொரோனா வைரஸ் அதிகளவு தொற்றும் தன்மை கொண்டதா என்பது உறுதியாக தெரியவில்லை என தெரிவித்துள்ள நிபுணர்ஒருவர் அது பரவும் தன்மை உடையது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வைரசில் கரிசனை அளிக்கும் தன்மை என்னவென்றால் அது மாற்றமடைவதே என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக அது குறித்து எதுவும் தெரியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய வீரியமிக்க கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைள் பலவற்றை அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, முகக்கவசங்களை கட்டாயமாக்குவது உட்பட பல நடவடிக்கைகளை பிரதமர் அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை தேசிய அமைச்சரவையின் கூட்டத்தின் பின்னர் பிரதமர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
வீரியமுள்ள வைரசினால் உருவாகியுள்ள சமூக பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரிஸ்பேர்ன் மூன்று நாட்களிற்கு முடக்கப்படுகின்றது என குயின்ஸ்லாந்து அறிவித்துள்ள நிலையிலேயே பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

பெப்ரவரி 15ம் திகதிவரை நியுசவுத்வேல்ஸ் குயின்லாந்து மேற்கு அவுஸ்திரேலியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அரைவாசியாக குறைக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு புறப்படுவதற்கு முன்னர் பயணிகள் தங்களை கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தி தாங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை நிருபிக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பயணிகள் விமானங்களில் விமான நிலையங்களில் முகக்கவசத்தினை அணியவேண்டும், என ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார்.

விமானபணியாளர்கள் ஏழு நாட்களிற்கு ஒருமுறையோ அல்லது விமானங்கள் தரையிறங்கிய உடனேயோ தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்

.