சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்க முடிவு செய்தது.
இந்த சிறப்புக்குழு வுகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் என தெரிவித்தது.
இந்நிலையில், சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெட்ரோஸ் அதனோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வுசெய்ய அங்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவுசெய்தோம். ஆனால் நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்காமல் சீன அரசு தாமதித்து வருவது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.