பாக்கிஸ்தானில் இந்து ஆலயம் மீதான தாக்குதல் தொடர்பில் பலர் கைது

இந்து ஆலயம் மீதானதாக்குதல் தொடர்பில் பாக்கிஸ்தானில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ பரம்ஹான்ஸ் ஜி மகாராஜ் சமாதி என்ற இந்து ஆலயம் தாக்கி தீயிட்டு எரிக்கப்பட்டமை தொடர்பிலேயே பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாக்கிஸ்தானின் வடமேற்கு பிராந்தியமான கைர் பக்துன்வாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்து ஆலயம் தாக்கியழிக்கப்பட்டமைக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் மற்றும் தாக்குதலை தூண்டியவர்கள் என 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் மேலும் பலர் கைதுசெய்யப்படுவார்கள் என காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக புனரமைக்கப்பட்டுக்கொண்டிருந்த ஆலயத்தினை விஸ்தரிப்பது உள்ளுர் மக்களை காயப்படுத்தியிருந்த நிலையிலேயே ஆலயத்தின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பாக்கிஸ்தான் சனத்தொகையில் இரண்டு வீதமாக காணப்படுகின்ற இந்து மதத்தவர்கள் ஆலயத்தை புனரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதனை விஸ்தரிக்க முயன்றனர் என உள்ளுர் காவல் துறை  அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை வாங்கிய இந்துக்கள் அதனை திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனினும் அந்த பகுதி மக்கள் அதனை எதிர்த்தனர் என காவல் துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் சீற்றம் கொண்டிருந்தனர் என காவல் துறை  அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானின் ஜமியாத் உலாமா- இ- இஸ்லாமிய கட்சியின்ஆதரவாளர்களும் உள்ளுர் மதகுருவொருவரும் ஆலயத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக காவல் துறை  அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்து ஆலயத்தின் மீதான தாக்குதல் மதஐக்கியத்தின் மீதான தாக்குதல் என பாக்கிஸ்தானின் மதவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.