உலக நாடுகள் அனைத்தையும் போலவே ஈழத் தமிழர்களுக்கும் 2020 என்பது கொடூரமான ஒரு வருடமாகவே கடந்து சென்றிருக்கின்றது. 2020 மார்ச் நடுப்பகுதியில் இலங்கைக்குள் பிரவேசியத்த கொரோனா, தீவின் பொருளாதாரத்தை ஸ்தம்பிதமடையச் செய்துவிட்டது. நாட்டின் அசைவியக்கத்தையும் இது பெருமளவுக்குப் புரட்டிப்போட்டுவிட்டது. புதிய அரசியல் குழப்பங்களுக்கும் இது காரணமாகிவிட்டது.
கொரோனாவின் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பேரினவாதம்தான் இலங்கையை ஆட்சி செய்யப்போகின்றது என்பது 2020 இல் நாம் கற்றுக்கொண்ட பாடம். 2020 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், சிறுபான்மையினரை முற்றாக ஓரங்கட்டும் அவர்களுடைய செயற்பாடுகள் இலங்கையை ஒரு பௌத்த சிங்களக் குடியரசு என்ற நிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றது. ஆட்சியாளர்களின் விருப்பமும் அதுதான்.
தமிழ் அரசியல் பரப்பிலும், 2020 ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டு எனச் சொல்லலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த தனித்துவம் தெளிவாக உடைக்கப்பட்ட ஆண்டு இதுதான். ஆக்ஸ்ட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு, தமிழ் அரசியல் பரப்பில் அவர்கள்தான் ஏக பிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஆட்சி மாற்றம்
2020 ஒரு ஆட்சி மாற்றத்துடன்தான் பிறந்தது. 2019 நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப்பீடம் ஏறிய கோட்டாபய ராஜபக்ஷ, 2020 ஜனவரி 2 ஆம் திகதி பாரளுமன்றத்தில் நிகழ்த்திய உரை முக்கியமானது. இலங்கை பேரினவாதப் போக்கில் மட்டுமன்றி சர்வாதிகாரப் போக்கிலும் செல்லப்போகின்றது என்பதை அவரது உரை வெளிப்படுத்தியது.
பாராளுமன்றம் பதவியேற்ற நான்கரை மாதங்கள் பூர்தியான உடனடியாகவே பெப்ரவரி இறுதியில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கோட்டாபய கலைத்தார். ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்ச்சில் இலங்கைக்குள் கொரோ புகுந்துகொண்டதால் பொதுத் தேர்தலை நடத்த முடியாத நிலை உருவாகியது.
சுமார் ஆறு மாத காலம் பாராளுமன்றம் இல்லாமலேயே ஜனாதிபதியால் ஆட்சி நடத்தப்பட்டது. கொரோனா பரவலால் ஏற்பட்ட நிலை, பொருளாதாரம், நிதி ஒதுக்கீடு போன்றவை காரணமாக கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்தப் பின்னணியில் ஆகஸ்ட் மாதம் – கோவிட்ட அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு ராஜபக்ஷக்களின் ஆட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. புதிய பாராளுமன்றத்தில் தமக்கு ஆதரவளிக்கக்கூடிய கட்சிகளையும் இணைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக்கொண்டது. அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு இது ராஜபக்ஷக்களுக்கு உதவியது. இதன்மூலம் பௌத்த சிங்கள பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வாதிகார – ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சி இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டது. 2020 இல் ஏற்பட்ட முக்கிய மாற்றம் இது!
தமிழ் அரசியலில்
தமிழ் அரசியல் பரப்பிலும் 2020 முக்கியமான மாற்றங்கள் நிறைந்த ஒரு ஆண்டாகத்தான் அமைந்தது. ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக் காணப்பட்ட நிலையை முறியடித்தது. வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு 10 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ள நிலையில், கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு ஆசனங்களையும், விக்கினேஸ்வரன் ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ள அதேவேளையில், அரசுக்கு ஆதரவான டக்ளஸ் தேவானந்தா இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அதனைவிட ஆளும் கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன், வியாழேந்திரன், சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரின் தெரிவு தமிழ் மக்கள் கூட்டமைப்புடன் மட்டும் இல்லை என்ற செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றது. இது கூட்டமைப்பின் தனி ஆதிக்கத்துக்கு விடப்பட்டுள்ள முக்கிய சவால். அபிவிருத்தியையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்ற செய்தி – அரசுடன் இணைந்திருக்கும் தமிழ்க் கட்சிகளுக்குக் கிடைத்த ஆதரவு வெளிப்படுத்தியிருக்கின்றது. இது கூட்டமைப்பின் கடந்த 10 வருடகால தனித்துவத்துக்குக் கிடைத்த அடி.
விக்கினேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் தவிர தமிழ்த் தேசியவாதத்தை வெளிப்படுத்தி வருவதும் பாராளுமன்றத்தில் அவர்கள் நிகழ்த்திவரும் உரைகளில் காணப்படும் தீவிரமும், கருத்துச் செறிவும் கூட்டமைப்புக்குச் சவால்விடக்கூடியவர்களாக அவர்களை முன்னிறுத்தியிருக்கின்றது. சிங்களத் தேசிவாதிகள் அவர்களைத்தான் தமது பிரதான வைரிகளகப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை வரும் வருடங்களிலும் தொடரலாம். அதற்கான ஏதுநிலைகள் தெளிவாகக் காணப்படுகின்றது.
முஸ்லிம் எதிர்ப் போக்கு
கொரோனாவுடன் இலங்கைத் தீவில் உருவாகியிருக்கும் “புதிய வழமை நிலை”யில் முக்கியமான ஒரு அம்சமாக முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு காணப்படுகின்றது. கொரோனாவால் மரணமடையும் அனைவரையும் தகனம் செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு நிச்சயமாக முஸ்லிம்களுக்கு எதிரானதுதான். உலகின் 190 நாடுகள் கொரோனாவினால் மணிப்பவர்களை அடக்கம் செல்ல அனுமதி வழங்கியுள்ளன. உலக சுகாதார நிறுவனமும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், சிறுபான்மையினத்தவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்பதில் உறுதியாகவுள்ள கோட்டபய உறுதியாக இருக்கின்றார்.
இது உளவியல் ரீதியாக சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துவதற்கும், நம்பிக்கை இழக்கச் செய்வதற்குமான ஒரு முயற்சி. இது வெறுமனே முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒரு செயற்பாடு எனக் கருதமுடியாது. கிறிஸ்தவ மக்களும் இறந்த தமது உறவுகளை அடக்கம்தான் செய்கின்றார்கள். அவர்களுடைய மத நம்பிக்கையும் மீறப்படுகின்றது. “ஒரு நாடு ஒரு தேசம்” என்ற அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கம்தான் இது. இதன் அடுத்த கட்டங்கள் இன்னும் மோசமானதாக இருக்கலாம். கொரோனா உருவாக்கிய அவலங்களின் மத்தியிலும், தமது இனவாதப் போக்கைத் தீவிரப்படுத்துவதற்கான உபாயங்களைத்தான் அரசு வகுத்துவருகின்றது என்பது 2020 இல் நாம் கற்றுக்கொண்ட ஒரு பாடம்.
- அகிலன்